இறுதிகட்ட பட்டுவாடாவில் அரசியல் கட்சிகள் தீவிரம்
இறுதிகட்ட பட்டுவாடாவில் அரசியல் கட்சிகள் தீவிரம்
ADDED : மார் 15, 2026 04:55 AM

புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. அதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகள் சார்பாக களம் காணவுள்ள வேட்பாளர்கள், வாக்காளர்களை கவரும் பொருட்டு கடந்த ஓராண்டாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தனர்.
தேர்தல் அறிவிப்பு அறிவிக்க உள்ளதை தொடர்ந்து கடந்த இரு வாரமாக, வீடு வீடாக அரிசி மூட்டை, புடவை, வேட்டி, ஹாட் பாக்ஸ், மிக்சி, வெட் கிரைண்டர், காஸ் தட்டுப்பாட்டையொட்டி மின்சார அடுப்பு (இன்டக்சன் ஸ்டவ்), பாத்திரங்கள், பிளாஸ்க், சர்க்கரை, மளிகை பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
உச்சபட்சமாக தேசிய கட்சி சார்பில், அமைச்சரவையில் அங்கம் வகித்து வருபவரின் இளம் வாரிசு, மாநில தெற்கு எல்லையில் உள்ள தொகுதியில் களம் காணும் பொருட்டு கடந்த ஓராண்டாக அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.
இவர் இறுதி கட்டமாக தொகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்து புதுச்சேரியில் உள்ள பிரபல மண்டபத்தில் வைத்து பிரியாணி விருந்து வைத்து, தங்கள் பெற்றோர் மற்றும் சகோதரர் சகிதமாக ரொக்கப்பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே அன்பளிப்பு மழையில் நனைந்து வரும் புதுச்சேரி பிராந்திய வாக்காளர்கள், தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். .
