/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிர்வாக குளறுபடிகளில் சிக்கி புதுச்சேரி பல்கலை திணறல்: புதிய துணைவேந்தருக்கு காத்திருக்கும் சவால்கள்
/
நிர்வாக குளறுபடிகளில் சிக்கி புதுச்சேரி பல்கலை திணறல்: புதிய துணைவேந்தருக்கு காத்திருக்கும் சவால்கள்
நிர்வாக குளறுபடிகளில் சிக்கி புதுச்சேரி பல்கலை திணறல்: புதிய துணைவேந்தருக்கு காத்திருக்கும் சவால்கள்
நிர்வாக குளறுபடிகளில் சிக்கி புதுச்சேரி பல்கலை திணறல்: புதிய துணைவேந்தருக்கு காத்திருக்கும் சவால்கள்
ADDED : மார் 18, 2025 04:34 AM

புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் குளறுபடிகளில் சிக்கி திணறி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகளை புதிய துணைவேந்தர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி உதவியுடன் தீர்வு காண வேண்டும்.
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம் 800 ஏக்கர் பரப்பளவில் 1985 ஆண்டு துவக்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி உயர்கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் தன்னுடைய இலக்கில் இருந்து தடம்புரண்டு நிர்வாக குளறுபடிகளில் சிக்கி கடந்த சில ஆண்டுகளாக திணறி வருகிறது. தற்போது உச்சக்கட்டமாக பதிவாளர் பிரச்னையில் சிக்கி நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த பதிவாளர், நிதி அலுவலர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடி நியமனம் அல்லது பிரதிநிதித்துவ (டெபுடேஷன்) அடிப்படையில் நியமிக்க கடந்த 2017 டிச., 15ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
அதன்படி தாகூர் அரசு கல்லுாரியில் முதல்வராக பணியாற்றிய சசிகாந்த தாஸ் இந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளராக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2018 ஜூலை 5ம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
பல்கலைக்கழக செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த 2019 பிப்., 20ம் தேதி அவரை பதிவாளர் பணியில் இருந்து விடுவித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் மீண்டும் சசிகாந்ததாசுக்கு பதிவாளர் பதவியை வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் சசிகாந்தாஸ் கடந்த 14ம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் பணியில் சேர்ந்தும் கூட தற்போதைய துணைவேந்தர் தரணிகரசு ஏற்றுக்கொள்ளவில்லை. பதிவாளர் பதவியில் அனுமதி இல்லாமல் உட்கார்ந்து உள்ளீர்கள். இனி அனுமதி இல்லாமல் பல்கலைக் கழகத்திற்குள் வர கூடாது என, அதிரடியாக உத்தரவிட்டார்.
பதிலுக்கு சசிகாந்தாஸ், கோர்ட் உத்தரவின்படி பதிவாளர் பணியில் சேர்ந்த என்னை துணைவேந்தர் தரணிக்கரசு உள்ளே விடாமல் என்னுடைய கடமை செய்ய தடுக்கிறார் என, சட்டம் ஒழுங்கு எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார்.
தற்போது பதிவாளர் பதவிக்கு ரஜினிஷ் புட்டானியும், சசிகாந்தாசும் மோதலில் இருக்க பல்கலைக் கழக நிர்வாகம் அல்லோகலப்பட்டு வருகிறது. யாருடைய பேச்சை கேட்பது என, தெரியாமல் பல்கலைக்கழக ஊழியர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
பல்கலையில் முக்கிய உயர் பதவிகள் அனைத்தும் பல ஆண்டுகளாக பொறுப்புகள் அடிப்படையில் தான் கவனிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் உறுதியான நிலையான நிர்வாகம் இல்லை. பதிவாளர் பதவி எட்டு ஆண்டுகளாக பொறுப்பு அடிப்படையில் தான் கவனிக்கப்படுகிறது. நிதி அதிகாரி 5 ஆண்டுகளாக இல்லை. முக்கிய பொறுப்புகளே இப்படி கடையாணி இல்லாத சக்கரங்களாக இருந்தால் வளர்ச்சி எப்படி இருக்கும். தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ளுவதற்கு அக்கறை காட்டும் அதிகாரிகள் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ஏதும் செய்யவில்லை. இப்பிரச்னை மட்டும் அல்ல, இந்த பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த உள்ளூர் மக்களின் பிரச்னை, மாநில மாணவர்களின் உரிமை பிரச்னைகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை.
முக்கிய படிப்புகளில் இட ஒதுக்கீடு இல்லை
பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த புதுச்சேரி மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வகையில், 25 சதவீத இடங்களை ஒதுக்க மாநில அரசு கேட்டுக்கொண்டது. பரிசீலித்த பல்கலைக்கழகம், புதுச்சேரியில் இல்லாத படிப்புகளில் 25 சதவீத இடங்களை வழங்க ஒப்புக் கொண்டு, 1997ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
பல்கலைக்கழகத்தில் 54 பாடப்பிரிவுகள் உள்ள நிலையில், 20 பாடப்பிரிவுகளில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பு அளிக்கும் மிக முக்கியமான பாடப்பிரிவுகளில் ஒதுக்கீடு இல்லை.
ஆண்டுதோறும் இட ஒதுக்கீடு பிரச்னை எழுகிறது. இந்தாண்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியநிலையில் அனைத்து படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. 30 ஆண்டுகளாக பல்கலைக்கழக கதவை தட்டி வருகின்றனர். இவர்களுக்கு கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது.
இதுபோன்று பல நிர்வாக பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கிறது. புதுச்சேரி பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுபாட்டில் இல்லாதநிலையில், இந்த பிரச்னைகளை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டால் மட்டுமே தீர்வு காண முடியும்.
திசை திருப்பும் கும்பல்
புதிய துணை வேந்தர்கள் தொலைநோக்கு பார்வையுடன் தான் பொறுப்பேற்கின்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்கும்போதும் ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு, திசை திருப்பி விடுகிறது. இதனால் பல்கலைக்கழக வளர்ச்சி பாதிக்கிறது.
இந்த கும்பலை சேர்க்காமல் புதிய துணைவேந்தர் பனித்தி பிரகாஷ் பாபு, புறந்தள்ளினால் மட்டுமே இனி பல்கலைக்கழகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி சாத்தியமாகும். இதுவே பல்கலைகழக ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
ஊழியர் சங்கங்களின் குற்றச்சாட்டுகள்;
பல்கலைக்கழக பணியாளர் புத்தாக்க பயிற்சி மையம் சரியாக நிதியை கையாளவில்லை. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் அந்த பயிற்சி மையத்தில் மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விரைவாக தீர்வு காண வேண்டும்.
மத்திய உயர் கல்வி நிதி 500 கோடி கடன் வாங்கி 11 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டடங்கள் 1.5 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. மின்சாரம், பெஞ்ச் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. புதிய கல்வி கொள்கையில் அமல்படுத்தியும் உரிய அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தவில்லை.
பல்கலைக்கழக ரோடுகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த ரோடுகளை சரி செய்ய மாணவர்களே போராட்டம் நடத்தியுள்ளனர். சாலை வசதிகளை புதிய துணைவேந்தர் மேம்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக ஊழியர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற, புதிய பணியிடங்கள் ஏதும் நிரப்பப்படவில்லை. 200 பணியிடங்கள் வரை காலியாக உள்ளது. இதேபோல் பதவி உயர்வு கொடுக்கவில்லை. இதனால் பணிசுமையில் பல்கலைகழக ஊழியர்கள் குமுறுகின்றனர்.
பல்கலைக்கழக., அவுட்சோர்சிங் பணியில் 500 பேர் வரை உள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை. பாதிக்கு பாதி தான் இவர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. இதனால் ஒப்பந்த ஊழியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.