/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கல்
/
இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கல்
ADDED : ஜன 03, 2026 04:36 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர், கவுரவ ரேஷன் கார்டு நீங்கலாக மீதமுள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரிசி - 4 கிலோ, நாட்டு சர்க்கரை-1 கிலோ, பாசிபருப்பு-1 கிலோ, நெய்-300 கிராம், சன்பிளவர் சமையல் எண்ணெய்-1 லிட்டர் உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி கடந்த மாதம் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கான்பெட் நிறுவனம் டெண்டர் பணிகளை முடுக்கிவிட்டது. டெண்டர் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று 3ம் தேதி முதல் ரேஷன்கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இன்று மாலை 4:00 மணிக்கு சண்முகாபுரத்தில் இப்பணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார். நாளை முதல் படிப்படியாக பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
13ம் தேதிக்குள் 90 சதவீதத்தினருக்கு ரேஷன் கடைகள் வழியாக பொங்கல் பரிசு வழங்கப்பட்டுவிடும் என, கான்பெட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த காங்., ஆட்சியில் கவர்னர் கிரண்பேடிக்கும், அப்போதைய அரசுக்கும் மோதல் ஏற்பட்டு புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. அதையடுத்து பயனாளிகள் வங்கி கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்தது.
கடந்த 2021ல் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சை அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப் பருப்பு, கடலைப் பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. 2024, 2025ம் ஆண்டுகளும் 750 ரூபாய், பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
பு துச்சேரி - 2,63,386 ரேஷன் கார்டுகள், காரைக்கால் - 60,225, மாகி -7,981, ஏனாம் - 15,498 என மொத்தம் 3,47,090 ரேஷன்கார்டுகள் உள்ளன. ஒரு பொங்கல் தொகுப்பின் மதிப்பு ரூ.750. மொத்தம் இத்திட்டத்திற்கு ரூ. 26 கோடி அரசுக்கு செலவாகும்.

