புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் இன்று முதல் பொதுமக்கள் தாங்களாகவே பதிவு செய்யலாம் இயக்குநர் சுந்தரேஷ்பாபு தகவல்
புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் இன்று முதல் பொதுமக்கள் தாங்களாகவே பதிவு செய்யலாம் இயக்குநர் சுந்தரேஷ்பாபு தகவல்
ADDED : மே 17, 2026 04:13 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது. பொதுமக்கள் தாங்களாகவே தகவல்களை பதிவு செய்யலாம் என, புதுச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இயக்குநர் சுந்தரேஷ்பாபு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இந்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டப் பணிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று மே 17ம் தேதி முதல் தொடங்குகின்றன.
இந்தக் கணக்கெடுப்பு கிராமம் மற்றும் வார்டு மட்டத்திலான விரிவான தரவுகளை வழங்கும் முதன்மை ஆதாரமாகும்.
நாட்டின் திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதி வரையறை போன்ற மிக முக்கியமான செயல்பாடுகளுக்கு இத்தரவுகள் அடிப்படையாக அமைகின்றன.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, சுய கணக்கெடுப்பு, நேரடி கள ஆய்வு என இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலையில் பொதுமக்கள் தாங்களே https://se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தகவல்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு இன்று 17ம் தேதி முதல் வரும் மே 31-ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.
இந்த கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.
இரண்டாம் நிலையில் கணக்கெடுப்பு அலுவர்கள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நேரடியாக வீடு வீடாக சென்று தகவல்களைச் சேகரிப்பார்கள்.
இந்தக் கணக்கெடுப்பின் போது, வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையல் எரிபொருள், மின்சாரம், தொலைபேசி, இணைய வசதி, வாகனங்கள் மற்றும் இதர வசதிகள் உள்ளிட்ட மொத்தம் 33 முக்கிய விவரங்கள் சேகரிக்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-ன் படி கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுமக்கள் உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். தவறான தகவல் வழங்குவது, பணியைத் தடுப்பது அல்லது ஒத்துழைக்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
பொதுமக்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும். நமது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் துல்லியமான புள்ளிவிவரங்கள் மிக அவசியம்.
எனவே, புதுச்சேரி மக்கள் அனைவரும் இந்த மக்கள் முழுமையாகத் தங்களை தேசியப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு, சரியான தகவல்களை வழங்க வேண்டும்.
தகவல்களை கொடுப்பதால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசின் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது. அரசின் எதிர்கால திட்டங்களுக்கு உதவும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்பாடாத வகையில் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
