புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
UPDATED : ஆக 05, 2026 11:28 PM
ADDED : ஆக 05, 2026 10:25 PM
புதுச்சேரி:புதுச்சேரி என்.ஆர்.காங்.,-பா.ஜ., இடையில் நிலவி வந்த, அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு பிரச்னை 3 மாத காத்திருப்புக்கு பின் நேற்று முடிவுக்கு வந்தது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிந்து அமைச்சர்கள் தவணை முறையில் பதவியேற்றனர். கடந்த மே மாதம் 13ம் தேதி என்.ஆர். காங்., தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் பா.ஜ., தரப்பில் நமச்சிவாயம், என்.ஆர். காங்., சார்பில் மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதனை தொடர்ந்து, ஜூன் 17ம் தேதி அடுத்த கட்டமாக என்.ஆர்.காங்., சார்பில் ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் பா.ஜ., சார்பில் ராஜசேகரன் ஆகிய மூவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், இவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.பா.ஜ., பவர்புல் இலாகா கேட்டதால் சிக்கல் நீடித்தது. இந்நிலையில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., இடையில் நிலவி வந்த இலாகா பிரச்னை முடிவுக்கு வந்தது. நேற்றிரவு 9:15 மணியளவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது.
நிதி உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை முதல்வர் ரங்கசாமி மீண்டும் தக்க வைத்துக்கொண்டுள்ளார். கடும் அழுத்தம் கொடுத்த பா.ஜ., கட்சி, அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உள்துறையை மீண்டும் பெற்று தந்துள்ளது. இதேபோல் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், ராஜவேலு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், சிவக்கொழுந்து குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சராகவும், ராஜசேகரன் வேளாண் அமைச்சராகவும் நியமித்து, இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 84 நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது.
