சமூக வலைதளம் படுத்தும் பாடு 'சுவரொட்டி' விலை 'கிடுகிடு'
சமூக வலைதளம் படுத்தும் பாடு 'சுவரொட்டி' விலை 'கிடுகிடு'
ADDED : அக் 08, 2023 04:25 AM
சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோவால், புதுச்சேரியில் ஆட்டிறைச்சியான சுவரொட்டியை தேடி மக்கள் அலைவதால், அதன்விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
சமூக வலைதளங்களில் உலா வரும் சில மருத்துவ குறிப்புகளை பார்த்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இதை தின்றால் இந்த நோய் குணமாகும்; இந்த கஷாயத்தை குடித்தால் கேன்சர் குணமாகும் என சிலர் பல்வேறு நோய்களுக்கு வைத்தியராக மாறி, குறிப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலரோ, உயிர்பிழைக்க முடியாத நோயாளியை கூட, இந்த இலை, தழைகளை கொண்டு குணமாக்க முடியும் என பரப்புவதால் பலர் நம்பி விடுகின்றனர்.தற்போது இதேபோன்ற ஒரு மருத்துவ குறிப்பு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.அதில், ஆட்டு இறைச்சியில் உள்ள சுவரொட்டியை (மண்ணீரல்) மூன்றாக கிழித்து அதில் மூன்று வெள்ளை எருக்கம் பூக்களை திணித்து, நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் மூளை, இருதயம் செல்லும் ரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கிவிடும் என கூறப்பட்டுள்ளது.
இதனை பார்த்த பலர், தற்போது ஆட்டு இறைச்சி கடைகளில் 'சுவரொட்டி' வாங்க அலைந்து திரிகின்றனர். அதனால், சாதாரணமாக 50 ரூபாய்க்கு விற்ற இரண்டு சுவரொட்டிகள், தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்பதிவு செய்தால் மட்டுமே இது கிடைக்கும் என்ற நிலையும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ளது.
