ADDED : மே 30, 2026 03:44 AM

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.
பாகூரில் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதில், கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டு, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
