ADDED : ஏப் 10, 2026 11:09 PM
பாகூர்: தேர்தல் முன் விரோதத்தில், மரக் கடை வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த நிர்ணயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 41; மரம் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் காலை ஓட்டு போடுவதற்காக அரங்கனுாரில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அங்களாம்மன் கோவில் அருகே சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த பிரபு (எ) ராமானுஜம் உள்ளிட்ட சிலர் காரில் வந்து மணிகண்டனை வழி மறித்தனர். பின், பிரபு, காங்., கட்சிக்கு வேலை செய்யுமாறு மணிகண்டனிடம் கூறி உள்ளார். அதற்கு மணிகண்டன் மறுத்துள்ளார்.
இதனால், அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து மணிகண்டனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
