அரசு பணியிடங்களை நிரப்ப பூர்வாங்க பணிகள் துவங்கியது: பிப்., அல்லது மார்ச்சில் போட்டி தேர்வுக்கு வாய்ப்பு
அரசு பணியிடங்களை நிரப்ப பூர்வாங்க பணிகள் துவங்கியது: பிப்., அல்லது மார்ச்சில் போட்டி தேர்வுக்கு வாய்ப்பு
ADDED : நவ 15, 2026 07:32 PM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 500 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்த அரசு ஆயத்தமாகி வருகிறது.
புதுச்சேரி அரசு துறைகளில் பல ஆண்டுகளாகப் போதிய அளவில் ஆட்கள் நியமிக்கப்படாததால், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருந்தன.
என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசு வேலை வாய்ப்புகளை நிரப்புவதில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் பல துறைகளில் நிலவி வந்த ஊழியர் பற்றாக்குறை ஓரளவுக்குக் குறைந்துள்ளது.
இருப்பினும், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதால், எஞ்சியுள்ள இடங்களையும் விரைவாக நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, புதிதாக மேலும் 2 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தி நியமனங்களை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு 500 அரசுப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் 35 ஆயிரம் பேர் இந்தப் பணியிடங்களுக்குப் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் போட்டித் தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
ஆனால், அறிவிப்பு வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்தும் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வேலை தேடி வருபவர்கள், போட்டித் தேர்வுகளுக்காகப் பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வருபவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தத் தேர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தேர்வு எப்போது நடைபெறும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற கேள்வி அவர்களிடையே தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த 500 இடங்களையும் நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை நிர்வாக சீர்திருத்தத் துறையும், தேர்வாணையமும் தற்போது முடுக்கிவிட்டுள்ளன. தேர்வுக்கான நடைமுறைகள், தேர்வு மையங்கள் அமைத்தல், விண்ணப்பதாரர்களுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதன்படி, வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் போட்டித் தேர்வுகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதே காலகட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளும் நடைபெற உள்ளன.
இதனால் தேர்வு மையங்களுக்கான இட நெருக்கடி ஏற்படாமல் இருப்பதையும், பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக பொதுத்தேர்வு கால அட்டவணை, தேர்வு மையங்களின் இருப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு போட்டித் தேர்வுக்கான தேதியை இறுதி செய்ய பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் போட்டித் தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசு வேலைக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
