வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ADDED : ஏப் 22, 2026 10:30 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஓட்டு எண்ணிக்கை ஒருங்கிணைப்பு அதிகாரியான கூடுதல் கலெக்டர் சுதாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 9ம் தேதி நடந்தது. மொத்தம் 30 தொகுதிகளில் 1,099 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய நான்கு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை வரும் 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் இரண்டு தொகுதிகளை கவனிப்பார். ஒரு அதிகாரியின் கீழ் வரும் முதல் தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே, இரண்டாவது தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டையில் மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, தாகூர் அரசு கல்லுாரி ஆகிய மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
அதில், மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை(தனி), ஊசுடு (தனி), மங்கலம், வில்லியனுார், உழவர்கரை, கதிர்காமம் மற்றும் இந்திரா நகர் தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
தாகூர் அரசு கல்லுாரியில் தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை மற்றும் ராஜ்பவன் தொகுதிகளுக்கும், மகளிர் பெறியியல் கல்லுாரியில் உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம்(தனி), நெட்டப்பாக்கம் (தனி) மற்றும் பாகூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
ஓட்டு எண்ணிக்கை மையங்களில் எவ்வித இடையூறும் இன்றி, திறமையாகவும் வெளிப்படையாகவும் பணிகளை மேற்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
