/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வடகிழக்கு பருவமழை துவங்கியதால் முன்னேற்பாடு
/
வடகிழக்கு பருவமழை துவங்கியதால் முன்னேற்பாடு
ADDED : அக் 19, 2025 03:37 AM

புதுச்சேரி: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் நாளிலேயே புதுச்சேரி முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதில் நேற்று முன்தினம் காலைவரை பெய்த மழை அளவு விபரம் மி.மீ., வருமாறு:
லாஸ்பேட்டை 33.5; பாகூர் 17; புதுச்சேரி 14; பத்துக்கண்ணு 11; திருக்கனுாரில் 8 மி.மீ., மழை பதிவாகியது.
அருகாமையில் உள்ள தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள வீடூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
அணையின் முழு கொள்ளளவான 32 அடியில், 28 அடிக்கு நீர் நிரம்பியதை தொடர்ந்து, புதுச்சேரி பகுதியில் சங்கராபரணி ஆற்றங்கரை ஓர கிராமங்களுக்கு கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் பாகூர் 45; லாஸ்பேட்டை 38 மி.மீ., புதுச்சேரி 25;பத்துக்கண்ணு 13, திருக்கனுார் 9 மி.மீ., மழை பதிவாகியது. அதனையொட்டி, மழை நீர் தேங்கும் பகுதிகளை நேற்று காலை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக உப்பனாறு கால்வாய் அமைந்துள்ள மறைமலை அடிகள் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திக்கும் இடங்களை பார்வையிட்ட கலெக்டர், அப்பகுதியில் உள்ள குபேர் நகர் மற்றும் நேரு நகர்களுக்கு மழைநீர் செல்லாத வகையில் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பெண்ணையாற்றங்கரையை ஒட்டிய கொம்பந்தான்மேடு படுகை அணை, ஆராய்ச்சிக்குப்பம், சித்தேரி பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர், மூன்று கிராமங்களிலும் ஆற்றங்கரையை ஒரு மீட்டருக்கு உயர்த்தி பலப்படுத்தும் வகையில், மணல் மூட்டைகள் இருப்பு வைக்கவும், 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கண்காணித்து, உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.
வீடூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் போது கண்காணிப்பில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், கீழ்பரிக்கல்பட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர், மழைக் காலம் என்பதால் தேவையான மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைத்திருக்கவும், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிட்டார்.
கலெக்டருடன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.