ADDED : ஏப் 03, 2026 09:17 PM

புதுச்சேரி: பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, புதுச்சேரியில், 1 கி.மீ., துாரம் 'ரோடு ஷோ' நடத்தி பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
புதுச்சேரியில், சட்டசபை தேர்தல் ஏப்., 9ம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்தி, நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்காக, பிரதமர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை, 4:12 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோடு, முத்தியால்பேட்டை காந்தி வீதி வழியாக அஜந்தா சிக்னல் வந்தார்.
அங்கு திரண்டிருந்த ஏராளமான பா.ஜ., தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்களை பார்த்து, உற்சாகத்துடன் கையசைத்த பிரதமர், மாலை, 4:32 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறி, ரோடு ஷோவை தொடங்கினார்.
வாகனத்தில் பிரதமருடன், என்.ஆர்.காங்., தலைவரான முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரும் இருந்தனர்.
பிரதமரை வரவேற்கும் விதமாக, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பா.ஜ.,வினர் மற்றும் தொண்டர்கள் மலர் துாவியும், 'மோடி மோடி' என, முழக்கமிட்டும் வரவேற்றனர். அவர்களை பார்த்து பிரதமர் கையசைத்தபடியும், வணக்கம் தெரிவித்தபடியும் சென்றார்.
மாலை, 5:12 மணிக்கு ராஜா தியேட்டர் காமராஜர் சதுக்கத்தில், ரோடு ஷோ நிறைவடைந்தது. பின், அங்கிருந்து மாலை, 6:00 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு சென்றார்.
