ADDED : ஆக 21, 2026 06:02 PM
திருபுவனை: திருபுவனையில் மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
திருபுவனை பெரியபேட் புதுமனை வீதியை சேர்ந்தவர் ஐயப்பன், 45; வடமங்கலத்தில் உள்ள மாத்திரை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு கீதா, 41, என்ற மனைவியும், சஞ்சய், 23, என்ற மகன், பூவிகா, 21, என்ற மகள் உள்ளனர். ஐயப்பன் தான் வசித்த கூரை வீட்டை இடித்து அகற்றிவிட்டு, புதிய கான்கிரீட் வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார்.
புதிய வீடு கட்டுமான பணிக்காக தனது காலி மனையின் ஒரு பகுதியில் இரும்பு ஷீட்டாலான தற்காலிக வீட்டில் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் மின் சாதனங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஐயப்பன் மயக்கமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
