/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மிதவை தடுப்பில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்தாததால் பாழாகும் திட்டம்
/
மிதவை தடுப்பில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்தாததால் பாழாகும் திட்டம்
மிதவை தடுப்பில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்தாததால் பாழாகும் திட்டம்
மிதவை தடுப்பில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்தாததால் பாழாகும் திட்டம்
ADDED : நவ 20, 2024 07:19 AM

புதுச்சேரி : பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதை தடுக்க உருவாக்கப்பட்ட மிதவை தடுப்பு அமைப்பில் குவிந்துள்ள குப்பைகள் அகற்றாததால் திட்டம் பயனற்று போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சி காலத்தில், வடிகால் வாய்க்கால்களாக இருந்த உப்பனாறு மற்றும் பெரிய வாய்க்கால் தற்போது கழிவுநீர் வாய்க்கால்களாக மாறிவிட்டது. புதுச்சேரி நகர பகுதி முழுதும் வீடுகள், ஓட்டல்கள் அனைத்திற்கும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்தும், சாலையோர சிறிய சைடு வாய்க்கால், ப வடிவ வாய்க்கால் அனைத்திலும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சிறிய வாய்க்கால் அனைத்தும் பெரிய வாய்க்கால் மற்றும் உப்ப னாற்றில் கலக்கிறது. இரு வாய்க்கால்களில் வரும் கழிவுநீர், உப்பளம் புதிய துறைமுகம் முகத்துவாரம் அருகே கடலில் கலக்கிறது.
கழிவுநீரில் கலந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகள் நேரடியாக கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில், பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து எடுப்பதிற்காக, பாண்டி மெரினா பின்பக்கம், துறைமுகத்துறை சார்பில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
ரூ. 15.5 லட்சம் செலவில், கடந்த ஜூன் மாதம் வாய்க்காலில் மிதக்கும் குப்பை தடுப்பு அமைப்பை உருவாக்கினர். 42 மீட்டர் நீளம், 1 மீட்டர் ஆழத்தில், இரும்பு தடுப்பு கம்பிகளுடன், மிதக்கும் பிளாஸ்டிக் பேரல்கள் இணைக்கப்பட்டு தடுப்பு மிதவை அமைக்கப்பட்டது.
இதன் மூலம் பெரியவாய்க்கால், உப்பானாற்றில் வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டயர்கள் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் மிதவை தடுப்பு மூலம் தடுக்கப்படும். அதில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒவ்வொரு வாரமும் துார்வாரி சுத்தம் செய்யும் பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதல் ஓரிரு வாரங்கள் மட்டுமே மிதவை தடுப்பில் சேர்ந்த குப்பைகளை பொதுப்பணித்துறை அகற்றியது. அதன்பின்பு, மிதவை தடுப்பில் சேரும் குப்பைகள் அகற்றப்படாமல் கிடக்கிறது.
மாதக்கணக்கில் சேர்ந்த பிளாஸ்டிக் குப்பைகள், ஆகாயத்தாமரைகள் மிதவையை உடைத்து கொண்டு செல்லும் அளவுக்கு சேர்ந்துள்ளது. குப்பைகளை அகற்றாததால் பெரிய வாய்க்காலிலும் கழிவுநீர் பல அடி உயரத்திற்கு தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
கடல் சூழலை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இத்திட்டம் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் பாழாகி வருகிறது.

