/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலுார் சாலையை ஆறுவழிசாலையாக மாற்ற ஆலோசனை; 'பலே' திட்டத்திற்கு தயாராகும் பொதுப்பணித்துறை
/
கடலுார் சாலையை ஆறுவழிசாலையாக மாற்ற ஆலோசனை; 'பலே' திட்டத்திற்கு தயாராகும் பொதுப்பணித்துறை
கடலுார் சாலையை ஆறுவழிசாலையாக மாற்ற ஆலோசனை; 'பலே' திட்டத்திற்கு தயாராகும் பொதுப்பணித்துறை
கடலுார் சாலையை ஆறுவழிசாலையாக மாற்ற ஆலோசனை; 'பலே' திட்டத்திற்கு தயாராகும் பொதுப்பணித்துறை
ADDED : டிச 28, 2024 06:24 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடலுார் சாலையை, ஆறுவழிச்சாலையாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி நகர சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால், குறுகிபோய் உள்ளன. இதனால் ஒவ்வொறு நாளும் வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாதபடி, சாலைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறி வருகின்றன.
அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் எறும்பை போல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்திரா, ராஜிவ் காந்தி சிக்னல்களில் மேம்பாலம் கட்ட புதுச்சேரி அரசு திட்டத்தை தீட்டி மத்திய சாலை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.
அடுத்தக்கட்டமாக நெரிசல் மிகுந்த புதுச்சேரி - கடலுார் இருவழிச்சாலையை ஆறுவழி சாலையை மாற்ற பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. ஆறுவழியை சாலையாக மாற்ற 30 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரையிலான 13 கி.மீ.,தொலைவிற்கு 30 மீட்டர் சாலை அகலம் உள்ளது. எனவே இப்பகுதியில் ஆறுவழி சாலையாக மாற்றுவதில் எந்த பிரச்னையும் இல்லை.
அதே வேளையில் மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் ஆறு வரையிலான 2 கி.மீ., தொலைவிற்கு சாலையின் அகலம் 22 மீட்டர் மட்டுமே உள்ளது. இது அப்பகுதியில் ஆறுவழி சாலையாக மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இப்பகுதியில் சாலையின் இருபுறமும் 2 மீட்டர் அகலத்திற்கு சாலையை அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பொதுமக்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சாலையை அகலப்படுத்துவது குறித்து அந்தந்த தொகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுப்பணித் துறை தீவிர ஆலோசனை ஈடுபட்டுள்ளது.
கடலுார் சாலையில் ஏற்கனவே இந்திரா சிக்னல் முதல் முள்ளோடை வரை 18 கி.மீ., தொலைவிற்கு முதலில் நீண்ட மேம்பாலம் கட்ட புதுச்சேரி அரசு முடிவு செய்தது. மேம்பாலத்தின் கீழ் பகுதியும், சாலையாக பயன்படுத்தி கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது மேம்பாலம் திட்டம் கைவிடப்பட்டு, இறுதியாக கடலுார் சாலையை ஆறுவழி சாலையாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சத்திற்கு பொதுப்பணித் துறை அனுப்பி வைக்க உள்ளது. அதன் பிறகு நில கையகப்படுத்தல் பணிகள் துவங்க உள்ளன. மத்திய அரசு நிதியுதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்தவும் புதுச்சேரி அரசு முடிவு செய்து, பணிகளை வேகப்படுத்தி வருகிறது.

