/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு நிதியுதவி வழங்கல்
/
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு நிதியுதவி வழங்கல்
ADDED : ஜன 11, 2025 06:55 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, ரூ.12 கோடியே, 98 லட்சத்து, 86 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் வீதம், 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் ரங்காமி, சட்டசபை அலுவலகத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியை சேர்ந்த 1 லட்சத்து 346 பேர், காரைக்காலைச் சேர்ந்த 24 ஆயிரத்து 52 பேர், ஏனாமை சேர்ந்த 5 ஆயிரத்து 488 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் மொத்தம், 1 லட்சத்து 29 ஆயிரத்து 886 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே, 98 லட்சத்து, 86 ஆயிரம் நிதி உதவி, அவர்களின் வங்கி கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சாய் சரவணன்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர் முத்தம்மா, துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.