ADDED : ஜூன் 15, 2025 11:55 PM

நெட்டப்பாக்கம் : அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு காய்கறி விதை தொகுப்பு, விவசாய இடு பொருள், சமுதாய முதலீட்டு நிதி வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கத்தில் நடந்தது.
வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் தலைமை தாங்கினார். இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு பங்கேற்று, நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த 9 கிராம பஞ்சாயத்து சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இந்தியன் வங்கி சார்பில், வழங்கப்பட்ட ரூ. 11 லட்சத்து 60 ஆயிரம் கடனுதவிகள், சமுதாய மேம்பாட்டு நிதி ரூ. 45 லட்சம், நலிவுற்றோர் குறைப்பு நிதி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் காய்கறி விதை தொகுப்பினை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள், வட்டார வளர்ச்சி ஊழியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். விரிவாக்க அதிகாரி சவரிராஜன் நன்றி கூறினார்.