/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நகர வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பொதுப்பணித்துறை
/
புதுச்சேரி நகர வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பொதுப்பணித்துறை
புதுச்சேரி நகர வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பொதுப்பணித்துறை
புதுச்சேரி நகர வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பொதுப்பணித்துறை
ADDED : டிச 01, 2024 05:53 AM

புதுச்சேரி புஸ்ஸி வீதி - விக்தர் சிமோனல் வீதி சந்திப்பில், அழகிய வெள்ளை மாளிகையாக இருப்பது பொதுப்பணித் துறையின் தலைமை அலுவலகம் கட்டடம். பிரெஞ்சியர் ஆட்சி முதலே புதுச்சேரி நகர வளர்ச்சிக்கு அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்ததில் பொதுப்பணித் துறையின் கட்டடத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
பொதுப்பணித் துறை அலுவலகமாக செயல்படுவதற்கு முன் இந்த கட்டடத்தில் நாணயசாலை செயல்பட்டு வந்துள்ளது. அதற்கு அடையாளமாக இந்த அலுவலக வாயிலில் ஒரு செப்பேடும் பதிக்கப்பட்டுள்ளது.
நாணய சாலை மூடப்பட்ட பிறகு பின் இக்கட்டடம் 1884ல் அரசு பொது நுாலகமாகவும், அதன் பிறகு இக்கட்டடம் பாலம் மற்றும் சாலைக்கான தொழிற் கூட அலுவலகமாக இயங்கி வந்துள்ளது.
கடந்த 1954ல் இந்தியாவுடன் இணைந்த பின், புதுச்சேரி பொதுப்பணித் துறையாக மாற்றப்பட்டு, தலைமை பொறியாளர் அலுவலகம் இங்கு செயல்பட்டு வருகிறது.
பொதுப்பணித் துறைக்கு பிரெஞ்சியர் வரலாற்றுடன் நீண்ட தொடர்பு உண்டு. புதுச்சேரியில் வலுவான பிரெஞ்சியர் ஆட்சி ஏற்பட்ட பிறகு, பொதுமக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை தீட்ட துவங்கினர். கடந்த 1859ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்களை பராமரித்து நீர் தேவையை பூர்த்தி செய்ய ேஷப் தெ சர்வீஸ் தெ கோந்தரிபூசியோன் என்ற நிர்வாகத்தினை கொண்டு வந்தனர். அதன் கீழ் கேய்ஸ் கொம்யூன் என்ற அமைப்பினையும் தோற்றுவித்தனர்.
பின், 1911ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ளதை போன்று விவசாயம், கால்வாய், சாலை வெள்ள நிவாரணப்பணிக்கான சேந்திரிக்கா அக்ரிகோல் என்ற மற்றொரு அமைப்பினையும் தோற்றுவித்தனர்.
அந்த இரண்டு அமைப்புகளும் 1937 வரை புய்ரோ தெ கோந்தரி பூசியோன் எனும் நிர்வாகத்தின் கீழ் சர்வீஸ் தெ திராவோ புய்ப்ளிக் எனும் பெயரில் செயல்பட்டு வந்தன.
அதன்பின் 1937ல் டிசம்பர் 22ல் வெளியிட்ட ஆணையின்படி இவை அனைத்தும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.
இந்த கட்டடம் திராவோ புய்ப்ளிக் எனும் பிரெஞ்சு பெயரில் அதாவது, பொதுப்பணித் துறை கட்டடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இன்றைக்கும் திராவோ புய்ப்ளிக் என்று பிரெஞ்சு பெயரை தாங்கி தான் பொதுப்பணி துறை கட்டடம் நிற்கிறது.
பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் கட்டுமானம், கட்டட பராமரிப்பு, சாலைகள், பாலம், நீர்பாசனம் என பலவற்றிலும் கவனம் செலுத்தி புதுச்சேரி நகரை வடிவமைத்த பொதுப்பணித்துறை, குடிநீர், கழிவு நீர், வெள்ள பாதுகாப்பு, வாகன பதிவு, ரயில்வே பாதை, வானிலை, அகழ்வாய்வு என பல தடங்களிலும் சேவையாற்றி, மக்களின் சிக்கல்களை தீர்த்து வைத்த பெருமை உடையது.
தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப இன்றைக்கும் பல கோடி செலவில் புதுச்சேரி நகரை பொதுப்பபணித் துறை வடிவமைத்து நவீனமாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

