/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க., புகார்
/
தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க., புகார்
ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : இந்திராநகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்றால் துணை ராணுவத்தின் துணையோடு நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க., சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்திடம் மாநில அ.தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனு:ஆளும் என்.ஆர்.காங்., நன்னடத்தை விதிமுறைகளை கடைபிடிக்காமல் தங்கள் விருப்பப்படி அரசு இயந்திரத்தைத் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட தேர்தல் துறையும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறதே தவிர, சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.கடந்த 26ம் தேதி என்.ஆர்.காங்.,வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்த போது, அவருடன் வந்த முதல்வர் சிகப்பு விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனத்தில் அரசு ஊழியர்களுடன் தேர்தல் அலுவலகத்திற்குள் அரசு காரில் வந்ததோடு மட்டுமல்லாமல் நூற்றுக்கு மேற்பட்ட அவரது கட்சித்தொண்டர்களுடன் உள்ளே வந்தார். உள்ளே வரும் போது காங்., கட்சியைச் சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டு இருந்தனர். அப்போது வேண்டுமென்றே உள்ளே சென்று எங்களது (என்.ஆர்.காங்.,) வேட்பு மனுவை உடனடியாக வாங்க வேண்டுமென தேர்தல் அதிகாரிகளை வற்புறுத்தினர். விதிமுறைகள் மீறும் போது, அதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காத தேர்தல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவலர்களை வைத்துக்கொண்டு இடைத்தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த முடியாது.தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வேட்பு மனுதாக்கல் செய்த என்.ஆர்.காங்.,வேட்பு மனுவை புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு உத்தரவிட வேண்டும். இந்திராநகர் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டுமென்றால் துணை ராணுவத்தின் துணையோடு நடத்த வேண்டும்.