UPDATED : ஆக 18, 2026 07:51 PM
ADDED : ஆக 18, 2026 07:44 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 நாட்கள் நடைபெற்ற 'புதுச்சேரி கலை விழா 2026' ஆகஸ்ட் 17 ல் நிறைவடைந்தது.
சுதந்திரதினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து புதுச்சேரி கலை விழா 2026' புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் கடந்த 15ம் தேதி தொடங்கி, 17ம் தேதி நிறைவடைந்தது.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கலை விழாவில் ரியூனியன் நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் அசாம், தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், கேரளா, குஜராத், உத்தரகாண்ட் ஆகிய பல்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
மூன்று நாள் நடந்த கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள், வெளியூர், வெளி மாநில, வெளிநாடு சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். இதேபோல் கருவடிக்குப்பம், மடுகரை, உறுவையாறு மற்றும் திருக்கனூர் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது.
விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பளர் அமைச்சர் ராஜவேலு, கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். விக்னேஷ் எம்.எல்.ஏ., அரசு துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
