ADDED : ஆக 18, 2025 04:09 AM
புதுச்சேரி: புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து நடத்திய புதுச்சேரி கலைவிழா- 2025 நிறைவடைந்தது.
இந்த கலைவிழா புதுச்சேரி கடற்கரை, முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் திடல், நெட்டபாக்கம் சிவன் கோவில் திடல், பரிக்கல்பட்டு அரசு தொடக்கப்பள்ளி அருகிலும், காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திடல் என, 5 இடங்களில் நடந்தது.
இந்த கலைவிழாவில் புதுச்சேரி, தெலுங்கானா, ஒடிசா, கேரளா, மத்திய பிரதேசம், ஆந்திரா, மராட்டியம், மேற்கு வங்காளம், ஐம்மு காஷ்மீர் என பல்வேறும் மாநிலங்களை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
இதன் நிறைவு நேற்று கடற்கரை காந்தி திடலில் நடந்தது. விழாவில், அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் முரளிதரன் மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மைய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு மாநில கலைஞர்களின் நடனத்தை கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

