புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிப்பு: கட்சி பேனர்கள், விளம்பரத்திற்கு தடை
புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிப்பு: கட்சி பேனர்கள், விளம்பரத்திற்கு தடை
ADDED : மார் 16, 2026 04:30 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் அறிவிப்பை அடுத்து, கட்சி பேனர்கள், சுவர் விளம்பரம், வாகனங்களில் கட்சி கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் குலோத்துங்கன் செய்திக்குறிப்பு;
புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பொது இடங்கள், தனியார் கட்டடங்கள்,அரங்குகள், கூடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில், சுவர் விளம்பரம், போஸ்டர்கள்,பேனர்கள், கட்அவுட்கள் வைத்து, புதுச்சேரி அழகினை கெடுக்காமல், மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது.
எனவே பேனர்கள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் கட் அவுட்டுகளை பொது இடங்களில் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நன்னடத்தைப்படி திறந்த வெளியில் (அழகின் சிதைவதை தடுத்தல் ) சட்டம் 2010ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். வாகனங்களில் அனுமதி இல்லாமல் கட்சி கொடிகள், விளம்பரங்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களில் அரசியல் கொடிகள், ஸ்டிக்கர்கள், படங்கள், விளம்பரங்கள் போன்றவைகளை உபயோகப்படுத்துவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, ஒற்றை சாளர மைய அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
