புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு... ஓட்டு பதிவு:9.50 லட்சம் வாக்காளர்கள் தயார்
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு... ஓட்டு பதிவு:9.50 லட்சம் வாக்காளர்கள் தயார்
ADDED : ஏப் 08, 2026 06:52 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 7 மணி துவங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. மொத்தம் 9.50 லட்சம் வாக்காளர்கள் ஜனநாய திருவிழாவில் பங்கேற்று கடமையாற்ற உள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் மார்ச் 16ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்தது. மார்ச் 26ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கு 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி, தி.மு.க.,- காங்., இண்டி கூட்டணி, நடிகர் விஜயின் த.வெ.க., மற்றும் சீமானின் நா.த.க., இடையே நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 7 ஆம் தேதி வேட்பாளர்களின் பிரசாரம் முடிந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 7 மணி துவங்கி மாலை 6 மணி வரை 1099 ஓட்டுச்சாவடிகளில் நடக்கிறது.
உழவர்கரை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, நெட்டப்பாக்கம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக ஊசுடு தொகுதியில் 5 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் ஓட்டு போட தகுதியான வாக்காளர்களாக 9,50,639 பேர் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 5,03,832 பேர் பெண்கள், 4,46,667 பேர் ஆண்கள். மூன்றாம் பாலித்தவர் 140 பேர் ஆவர்.
பூத் சிலிப்
வாக்காளர்கள் அனைவருக்கும் பூத் சிலிப்பினை வீடு தேடி சென்று பி.எல்.ஓ.,கள் வழங்கியுள்ளனர். இதனுடன் வாக்காளர் புகைப்படை அடையாள அட்டையும் எடுத்து சென்றால் அலைச்சல் இல்லாமல் ஓட்டுபோடலாம்.
மொபைல்போனுக்கு தடை
ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் தவிர மற்றவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் தங்களது மொபைல்போன்களை கொண்டு வர வேண்டாம். மறந்து கொண்டு வந்தால் ஓட்டுச்சாவடி நுழைவாயிலில் உள்ள தன்னார்வலர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓட்டளிக்கலாம். டோக்கனை திரும்பி கொடுத்து மொபைல்போனை பெற்றுக்கொள்ளலாம்.
100 மீட்டர்களுக்குள்.
ஓட்டுபதிவு மைய நுழைவு வாயிலிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் எந்தவொரு வேட்பாளரும் பூத் சிலிப் மையம் அமைக்கக் கூடாது. அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்படும் வேட்பாளருக்கான பூத் சிலிப் மையத்தில் ஒரு மேஜை மற்றும் இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருக்க வேண்டும். வெயில் அல்லது மழையிலிருந்து பாதுகாக்க ஒரு குடை அல்லது 10 க்கு 10 அடி அளவுள்ள சிறிய கூடாரத்தை பயன்படுத்தலாம்.
பிரசாரத்திற்கு தடை:
ஓட்டுப்பதிவு நாளன்று, இன்று ஓட்டுசாவடியைச் சுற்றியுள்ள 100 மீட்டர் பரப்பளவிற்குள் எந்தவிதமான தேர்தல் பிரசாரமும் செய்ய அனுமதி கிடையாது. ஓட்டு சேகரிப்பது, எந்தவொரு வாக்காளரின் ஓட்டினை கோருதல், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டாமென்று வாக்காளரை கட்டாயப்படுத்துவது, வாக்காளரை தேர்தலில் ஓட்டளிக்க வேண்டாமென்று வற்புறுத்துவது அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவிர மற்ற விளம்பரப் பலகைகளை காட்சிப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் துறை எச்சரித்துள்ளது.
ஓட்டு பதிவு 6 மணிக்கு முடிந்த பிறகு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சி, வேட்பாளர்கள் பிரதான முகவர்கள் முன்னிலையில், சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
எதை கொண்டு ஓட்டு போடலாம் வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தங்களது ஓட்டை செலுத்த கீழ்கண்ட ஏதாவது ஒரு மாற்று அடையாள ஆவணங்களையும் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்லலாம். 1. ஆதார் அட்டை 2.பான் கார்டு 3.சர்வீஸ் அட்டையாள அட்டை 4. தனித்துவமான மாற்றுதிறனாளி அடையாள அட்டை 5.வங்கி அல்லது அஞ்சல புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம் 6.தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு 7.ஓட்டுநர் உரிமம் 8.இந்தியன் பாஸ்போர்ட் 9. இந்திய பதிவாளர் ஜெனரால்(ஆர்.ஜி.ஐ.,) வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு 10.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் 11.பார்லிமெண்ட் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை. 12 ஊரக வேலை உறுதி திட்ட பணி அட்டை
அரசியல் கட்சிகளின் பூத் சிலிப் செல்லுமா ஓட்டுபதிவிற்கு அரசியல் கட்சிகள் வழங்கிய பூத் சிலிப் கொண்டு போகலாமா என தேர்தல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, மாநிலத்தில் உள்ள 9.50 வாக்காளர்களுக்கு தேர்தல் துறையே பூத் சிலிப் வழங்கியுள்ளது. இதனை மட்டுமே ஓட்டு போட கொண்டு வர வேண்டும். அரசியல் கட்சிகளின் பூத் சிலிப்பிற்கு அனுமதி இல்லை. ஒருவேளை தேர்தல் துறை வழங்கிய பூத் சிலிங் இல்லையென்றாலும் கவலைப்பட தேவையில்லை. வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்தால், வரிசை எண்ணை கண்டறிய தேர்தல் அதிகாரிகள் உதவி செய்வர். இதனால் சுலபமாக ஓட்டளித்துவிட்டு செல்லாம் என்றனர்.
6 மணிக்கு மேல் ஓட்டு போட முடியுமா ஓட்டு பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. ஒரே வேளை 6.01 மணிக்கு வாக்காளர் ஓட்டு போட நுழைந்தால் கூட முடியாது. 6 மணிக்குள் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்படும். அதுவும் கடைசியாக வந்த நபர் முதல் நபராக கருதப்பட்டு காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். 6 மணிக்குள் வந்தவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டு போட முடியும். எனவே சாய்ந்திரம் போய் ஓட்டு போடலாம் என்று நினைக்காமல் முடிந்தவரைக்கும் சீக்கிரமா போய் ஓட்டு போடுங்க.
உடல் நலத்தையும பாத்துகோங்க... கடந்த சில வாரங்களாக கோடை வெய்யல் கொளுத்துகிறது. எனவே வெய்யலில் இருந்து தப்பிக்க காலையிலே ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றலாம். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, போதுமான அளவு தண்ணீர் மற்றும் இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை அருந்திவிட்டு ஓட்டுச்சாவடிக்கு வரலாம். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
