/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மவுண்ட் எல்ப்ரஸ் சிகரத்தை ஏறி புதுச்சேரி வீராங்கனை சாதனை
/
மவுண்ட் எல்ப்ரஸ் சிகரத்தை ஏறி புதுச்சேரி வீராங்கனை சாதனை
மவுண்ட் எல்ப்ரஸ் சிகரத்தை ஏறி புதுச்சேரி வீராங்கனை சாதனை
மவுண்ட் எல்ப்ரஸ் சிகரத்தை ஏறி புதுச்சேரி வீராங்கனை சாதனை
ADDED : ஜூலை 20, 2025 01:30 AM

ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான மவுண்ட் எல்ப்ரஸ் சிகரத்தை ஏறி, புதுச்சேரியை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை திவ்யா சாதனை படைத்தார்.
புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டைச் சேர்ந்தவர் திவ்யா, 29. மலையேற்ற வீராங்கனையான இவர், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் டிராங்கில் உள்ள தேசிய மலையேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டு நிறுவனத்தில் மலையேறுதல் மற்றும் பனிப்பாறை பயிற்சியை முடித்தார்.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள கார்டியன் கிரிபெர்மி மலையேறுதல் நிறுவனத்தில் அடிப்படை மற்றும் மேம்பட்ட பாறை ஏறுதல் பயிற்சியை பெற்றார். தற்போது ஐரோப்பா கண்டத்தின் ரஷ்யாவில் உள்ள 5,642 மீட்டர் உயரம் கொண்ட மலையான மவுண்ட் எல்ப்ரஸ் மலையை ஏறி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையை ஏறிய முதல் புதுச்சேரி பெண் என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார்.
இது குறித்து திவ்யா கூறுகையில், 'இந்திய இமயமலை தொடர்களில் 'அல்பைன் ஸ்டைலில்' 6,111 மீட்டர் உயரமுள்ள மலையை ஏறி முடித்துள்ளேன். இது எனது அதிகபட்சமான உயரமாகும்.
தற்போது ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான எல்ப்ரஸ் சிகரத்தை ஏறி முடித்துள்ளேன்.
தொடர்ந்து, கார்கிலில் உள்ள 7,077 மீட்டர் உயரமுள்ள குன்மலை மற்றும் 7,135 மீட்டர் உயரமுள்ள நன்மலை ஆகியவற்றை தொடர்ச்சியாக ஏற உள்ளேன்.
ரஷ்யாவில் இருந்து வரும் 23ம் தேதி டில்லி சென்று, 26ம் தேதி கார்கில் குன்மலையையும், ஆகஸ்ட் 16ம் தேதி நன்மலையை ஏற உள்ளேன்.
இந்த மலைகளை தொடர்ச்சியாக ஏற உள்ள தமிழ்பெண் நானாக இருப்பேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
இவரை ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு மலை ஏற்றத்திற்கான பயண செலவாக முதல்வர் நிதியில் இருந்து ரூ.1 லட்சத்தை முதல்வர் ரங்கசாமியும், புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் இயக்குநரகத்தின் மூலம் ரூ.2 லட்சத்தை அமைச்சர் நமச்சிவாயமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

