பெண்ணை கொன்று புதைத்த புதுவை கொத்தனார் சிக்கினார்
பெண்ணை கொன்று புதைத்த புதுவை கொத்தனார் சிக்கினார்
ADDED : ஏப் 17, 2026 04:05 AM

வில்லியனுார்: புதுச்சேரி அருகே பெண்ணை கொலை செய்து, முந்திரி காட்டில் உடலை புதைத்த கொத்தனாரை, போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த தமிழக பகுதியான வாழப்பட்டபாளையத்தை சேர்ந்தவர் அமுதா, 53; கட்டட தொழிலாளி. ஏப்., 11ல் அரியூரில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்று வந்தவர், திடீரென மாயமானார். வில்லியனுார் போலீசார் விசாரித்தனர்.
சந்தேகத்தில், அமுதாவுடன் நெருங்கி பழகி வந்த, புதுச்சேரி தருமாபுரியை சேர்ந்த கொத்தனார் பரந்தாமனை பிடித்து விசாரித்தனர்.
அதில், பரந்தாமன், அமுதாவிற்கு, 3.5 லட்சம் ரூபாய் வட்டிக்கு கொடுத்திருந்தார். அந்த பணத்தை, பரந்தாமன் திருப்பி கேட்டதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் அமுதா, தன் மகன்களிடம் கூறி, பரந்தாமனை தீர்த்துக் கட்டிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
ஆத்திரமடைந்த பரந்தாமன், அமுதாவை கொலை செய்ய திட்டமிட்டு, கூட்டாளி விஜேந்திரனுடன் சேர்ந்து, ஏப்., 11ல் வில்லியனுார் பைபாஸ் சாலையில் நின்றிருந்த அமுதாவை, பைக்கில் பூத்துறை முந்திரி காட்டிற்கு அழைத்து சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை புதைத்தது தெரிந்தது.
நேற்று காலை, பரந்தாமனை முந்திரி காட்டிற்கு அழைத்து சென்ற போலீசார், அமுதா உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலைமறைவான விஜேந்திரனை தேடுகின்றனர்.
