தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு
தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு
UPDATED : ஆக 19, 2026 11:25 PM
ADDED : ஆக 19, 2026 07:12 PM
புதுச்சேரி: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணிக்கிறார்.
சென்னை அடுத்த கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு காலை 10:00 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்க புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்கும் சூழ்நிலையில், முதல்வர் ரங்கசாமி புறக்கணிக்கிறார்.
என்ன காரணம்: தென் மாநில முதல்வர்கள் மாநாடு என்பதால் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கேரள முதல்வர் சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார், ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாயுடு ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வரை மட்டும் அழைக்காமல், கூடவே மாநில நிர்வாகியாக உள்ள கவர்னரையும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது கவர்னர் - முதல்வர் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சட்டசபை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும் கவர்னருக்கு தான் அதிகாரம். அவர் தான் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி. இருவரையும் அரசு விழாவிற்கு அழைக்கும்போது, மரபுபடி முதல்வரை காட்டிலும் கவர்னர் தான் உச்சம். அதன்படி தென் மாநில மாநாட்டில் பேச அழைக்கப்பட்டால் கவர்னருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இரண்டாம் நபராக தான் அந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி நடத்தப்படுவார். இது மட்டுமின்றி புதுச்சேரியின் ஒரே பிரச்னைகளை இருவருமே பேச வேண்டி இருக்கும். இது கவர்னருக்கும் தர்மசங்கடமாக இருக்கும் என்பதால் முதல்வர் ரங்கசாமி தென் மாநில முதல்வர்கள் மாநாட்டினை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.
சபாஷ் நல்ல முடிவு:: இந்த முடிவினை முதல்வர் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர். அவர்கள் கூறுகையில், 'அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட தீவுகளில் சட்டசபை இல்லை. அங்கு நிர்வாகி தான் எல்லாம். ஆனால் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்து இருக்கிறது. இங்கு மாநிலத்திற்குகென முதல்வர் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர். இது தென் மாநில முதல்வர்கள் மாநாடு. அப்படியென்றால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மட்டும் தான் அழைத்து இருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கவர்னருக்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாம் நபராக மத்திய உள்துறை முதல்வரை மாநாட்டில் பங்கேற்க அழைத்துள்ளது.
இது கண்டிக்கதக்கது. மாநில உரிமையை நிலைநாட்டவே முதல்வர் ரங்கசாமியை தென் மாநில முதல்வர்கள் மாநாட்டினை புறக்கணிக்கிறார். இதனை வரவேற்கின்றோம்' என்றனர்.
முதல்வர் டென்ஷன்:: தென் மாநில மாநாடு புறக்கணிப்பினை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது. தென் மாநில முதல்வர்கள் மாநாட்டு நிகழ்ச்சி நிரலுடன் முதல்வர் ரங்கசாமியை அரசு செயலர் ஒருவர் சந்தித்தபோது டென்ஷன் அடைந்தார்.
ஒரே விழாவில் புதுச்சேரியை பற்றி இரண்டு பேர் என்னத்த பேச போகிறோம். கவர்னரே பேசிக்கொள்ளட்டும். நான் வரவில்லை என, தடாலடியாக கூறிவிட்டார்.
