/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து விவகாரத்தில் புதுச்சேரி தொடர்ந்து புறக்கணிப்பு! முதல்வர் ரங்கசாமி மீதும் சரமாரியாக குற்றச்சாட்டு
/
மாநில அந்தஸ்து விவகாரத்தில் புதுச்சேரி தொடர்ந்து புறக்கணிப்பு! முதல்வர் ரங்கசாமி மீதும் சரமாரியாக குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து விவகாரத்தில் புதுச்சேரி தொடர்ந்து புறக்கணிப்பு! முதல்வர் ரங்கசாமி மீதும் சரமாரியாக குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து விவகாரத்தில் புதுச்சேரி தொடர்ந்து புறக்கணிப்பு! முதல்வர் ரங்கசாமி மீதும் சரமாரியாக குற்றச்சாட்டு
ADDED : மார் 28, 2025 05:19 AM

புதுச்சேரி; மாநில அந்தஸ்து விவகாரத்தில் புதுச்சேரி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மாநில அந்தஸ்திற்காக ஆட்சியை கலைத்துவிட்டு முதல்வர் போராட வந்தால் உறுதுணையாக இருப்போம் என எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்திய நாதன், நேரு ஆகியோர் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: முதல்வர் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்தை பெற்றே தீருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு அதைப்பற்றி பேசாமல் கிடப்பில் போட்டுவிட்டார்.
மாநில அந்தஸ்து குறித்து நாங்கள் கேள்வி எழுப்பிய பிறகு தான் அதனை தனது தீர்மானமாக அரசு நிறைவேற்றியது. ஆனால், அன்றைய கவர்னர் தமிழிசை, மாநில அந்தஸ்து கிடைத்தால் என்னென்ன கிடைக்குமோ அதை எல்லாம் நானே முன்னின்று பெற்றுக்கொடுப்பேன் என, அரசின் எண்ணத்திற்கு எதிராக பேசி அத்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்புவதில் தாமதப்படுத்தினார்.
தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் இந்த தகுதியைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ., க்களுடன் டில்லி சென்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதுவரை பல முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியாகிவிட்டது. ஆனால் மத்திய அரசு அதனை குப்பையில் தான் வீசுகிறது.
மத்திய அரசின் விளையாட்டு பொம்மையாகவும், அரசு அதிகாரிகளின் விருந்தினர் மாளிகையாக புதுச்சேரி மாறிவிட்டது. கல்வியை மாநில பட்டியலில் இருந்து துாக்கிவிட்டார்கள். நில அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தன்மானம் மற்றும் சுயமரியாதையை காக்க மாநில அந்தஸ்து வேண்டும். அதற்காக நீங்கள் ஆட்சியை கலைத்துவிட்டு வந்தால் தி.மு.க., உறுதுணையாக இருக்கும். மாநில அந்தஸ்திற்காக போராட தயாராக உள்ளோம்.
நாஜிம் (தி.மு.க.,): மாநில அந்தஸ்து சம்பந்தமாக கடந்த காலங்களில் புரிதல் இல்லாமல் உள்ளது. அரசு ஊழியர்கள் கூட யோசித்தனர்.
இன்றைக்கு நியமன விதிகள் திருத்த கூட மத்திய அரசுக்கு செல்ல வேண்டியுள்ளது என புரிந்து கொண்டுள்ளனர். மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
நம்மை விட மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்கிறது. ஆனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுக்கின்றனர்.
அனிபால் கென்னடி (தி.மு.க.,): சட்டசபையில் 15 முறை தீர்மானம் நிறைவேற்றி பல்வேறு அரசுகளால் மாநில அந்தஸ்து கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
கடந்த நான்கு ஆண்டு களாக மாநில அந்தஸ் திற்காக வெறும் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டு, காலம் கடத்தும் போக்கு கண் டிக்கதக்கது. இப்பிரச்னைக்காக அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும். அதன் பிறகு பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை அளிக்க வேண்டும். முதல்வர் செயலில் இறங்க வேண்டும்.
வைத்தியநாதன் (காங்.,): புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான மாநில அந்தஸ்து பல ஆண்டுகளாக மத்திய அரசால் நிறைவேற்றப்படாமல் உள்ளது. நிதி நிர்வாகம் மற்றும் முன்னேற்றத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதை தவிர வேறு வழியில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.
செந்தில்குமார் (தி.மு.க.,): புதுச்சேரி நான்கு பிராந்தியங்களாக பிரிந்துள்ளதால், மாநில அஸ்தஸ்து கொடுக்க கூடாது என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. ஒரு அடிமை சிக்கிவிட்டது என்ற ரீதியில் மத்திய அரசு நம் மீது அதிகாரம் செலுத்துகிறது.
புதுச்சேரிக்கு பொருளாதார சுதந்திரம் கூட இல்லை. பட்ஜெட்டிற்கு அனுமதிக்கு கூட மத்திய அரசினை நாட வேண்டியுள்ளது. சட்டசபை சுதந்திரம் கூட கிடையாது.
ரேஷன் கடையை கூட திறக்க மத்திய அரசின் அனுமதியை கேட்க வேண்டியிருக்கிறது. இந்த அடிமையில் இருந்து விடுதலை பெற மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே தீர்வு.
நேரு (சுயேச்சை): மாநில அந்தஸ்து இல்லாததால், புதுச்சேரி அரசு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தபோது பிரெஞ்சிந்திய ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில் புதுச்சேரி மக்களின் உரிமைகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
கோவா, மிசோரம், சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்களுக்கு கூட மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அரசின் ஜன்னலாக புதுச்சேரி இருக்கும் என மறைந்த முன்னாள் பிரதமர் நேரு கூறினார்.
அவர், கூறியதை போன்று நிதியும் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று 20 சதவீத நிதிகூட கிடைக்கவில்லை. அதுவும் கடனை பிடித்து கொண்டு தருகின்றனர். தற்போது நாம் போட்டுள்ள 13,600 கோடி பட்ஜெட்டில் மத்திய நிதி ரூ.3,500 கோடி மட்டுமே.
நிதி கமிஷனில் இருந்தால் இந்த நிதி தானாகவே வந்துவிடும். மாநில அந்தஸ்து இல்லாததால் புதுச்சேரி பின்தங்கி உள்ளது. அனைத்துக்கும் ஒரே தீர்வு மாநில அந்தஸ்து தான்.
இதற்காக, முதல்வர் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநில அந்தஸ்து கேட்க வேண்டும் என்றார்.