ரகளை செய்த வாலிபருக்கு புதுச்சேரி கோர்ட் நுாதன தண்டனை
ரகளை செய்த வாலிபருக்கு புதுச்சேரி கோர்ட் நுாதன தண்டனை
ADDED : ஜூன் 10, 2026 04:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் போதையில் பொது மக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்ட வாலிபருக்கு கோர்ட் நுாதன தண்டனை வழங்கியுள்ளது.
புதுச்சேரி புற நகர் பகுதியை சேர்ந்த 30 வயது சிலம்பரசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர், சில தினங்களுக்கு முன், லாஸ்பேட்டை பகுதியில் குடி போதையில் நடு ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியே சென்ற பொதுமக்களுக்கு ஏகப்பட்ட இடையூறுகளை கொடுத்து ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
கடுப்பான பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த லாஸ்பேட்டை போலீசார், சிலம்பரசனை கைது செய்து, புதுச்சேரி மாஜிஸ்திரேட் -1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கமான சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்காமல் ஒரு மாஸ் உத்தரவை போட்டார். நீ பொதுமக்களுக்கு இடையூறு செய்ததால், அவர்களின் கஷ்டங்களை நீயும் அனுபவிச்சு தெரிந்து கொள்ள வேண்டும்.
அதனால் புதுச்சேரியோட பயங்கர பிசியான ஏரியாவான ராஜிவ் சதுக்கத்துல, தொடர்ந்து 2 நாட்களுக்கு மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வடக்கு போக்குவரத்து போலீசாரோடு சேர்ந்து 'டிராபிக்கை' சரி செய்ய வேண்டும்.
டிராபிக் போலீஸா... என, சிலம்பரசன் ஷாக்காவதற்குள் ஆர்டர் கன்பார்ம் ஆனது. வேறு வழியில்லாமல், சொன்னபடியே நேற்று முன்தினமும், நேற்றும் வாகனப் புகைக்கு நடுவே செம பிசியான ராஜிவ் சதுக்கத்தில் நின்று கொண்டு, போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து டிராபிக்கை சீர் செய்தார்.
மாலை நேர பீக் ஹவர் டிராபிக்கில் வண்டிங்களை நிப்பாட்டி, வழி அனுப்பி வைக்கும்போது தான், அப்பாடா... ரோட்டுல போற பொதுமக்களோட கஷ்டம் இப்ப தான் புரியுது என, சிலம்பரசனுக்கும் இப்போது ஞானோதயம் வந்துவிட்டது. இந்த நுாதன தண்டனை சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
இனிமே ரோட்டுல நின்னு யாராவது அலப்பறை கொடுத்தால், நேரா கூட்டிட்டு போய் டிராபிக் சிக்னல்ல நிக்க வச்சிருங்கப்பா என, புதுச்சேரி வாகன ஓட்டிகளும், நெட்டீசன்களும் குஷியாக கமென்ட் அடித்து வருகின்றனர்.
