/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணம்...உயர்வு : சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணம்...உயர்வு : சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணம்...உயர்வு : சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணம்...உயர்வு : சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : ஆக 29, 2011 10:42 PM
புதுச்சேரி : 'சென்டாக் மூலம் மருத்துவப் படிப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டண தொகையாக ரூ.2.25 லட்சம் வழங்கப்படும்' என, முதல்வர் ரங்கசாமி கூறினார்.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதல்வர் அளித்த பதில்: கடந்த ஆண்டு பட்ஜெட்டைக் காட்டிலும் ரூ.250 கோடிதான் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் கூறினர். இந்த நிதியைக் கூடுதலாகப் பெறுவதில் எவ்வளவு சிரமம் இருந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திட்டக் குழுவில், 'கடந்த ஆட்சியில் பெறப்பட்ட திட்ட ஒதுக்கீட்டில் 64 சதவீத நிதிதான் செலவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உங்களால் எப்படி கூடுதல் நிதி பெற்று செலவு செய்ய முடியும்' என, கேள்வி எழுப்பினர். அதற்கு நான், 'ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை செலவு செய்துள்ளேன். எனவே, கூடுதல் நிதி ஒதுக்கிக் கொடுங்கள்' என வலியுறுத்தினேன். முழு தொகையையும் செலவு செய்து, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வருவோம்.
மத்திய அரசிடம் பெற்றுள்ள கடனைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். நான் ஆட்சிப் பொறுப்பேற்று டில்லி சென்று, சோனியா, பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரைச் சந்தித்தபோது, முதலில் இந்தக் கோரிக்கையைத்தான் வலியுறுத்தினேன். வட்டியோடு கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கடிதமும் கொடுத்தேன். மேலும், மாநில வளர்ச்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.3645 கோடி கேட்டு கடிதம் கொடுத்துள்ளேன். மத்திய அரசு நமக்கு கொடையாகக் கொடுக்கும் நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. கொடையாக 70 சதவீதம் தருமாறு வலியுறுத்தி உள்ளேன். வருமான உச்சவரம்பின்றி சென்டாக் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தரப்படும் என கூறப்பட்டது. பிம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.2.40 லட்சம், மணக்குள விநாயகர் கல்லூரிக்கு 2.25 லட்சம், வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு 2 லட்சத்து 3 ஆயிரம் கல்விக் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நமது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, சென்டாக் மூலம் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் சராசரியாக ரூ.2.25 லட்சம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், பொறியியல் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசு திருப்பிச் செலுத்தும். எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி எம்.பி.,க்கள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கிக் கொடுத்தால், சென்டாக் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க வசதியாக இருக்கும். ஆதிதிராவிடர் இன மக்கள், தங்கள் கூரை வீடுகளை 450 சதுர அடியில் கல் வீடுகளாகக் கட்டிக் கொள்ள வழங்கப்படும் ரூ.2 லட்சம் உதவித் தொகை, ரூ.4 லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும். இத் தொகை, உண்மையில் தேவையானவர்களுக்கு வழங்கப்படும். மூன்று பஞ்சாலைகள், இரண்டு நூற்பாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் கூறினார்.