தேர்தல் விதிமுறைகளை மீறிய 12 பார்களுக்கு 'சீல்' புதுச்சேரி கலால் துறை அதிரடி
தேர்தல் விதிமுறைகளை மீறிய 12 பார்களுக்கு 'சீல்' புதுச்சேரி கலால் துறை அதிரடி
ADDED : ஏப் 05, 2026 06:46 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய 12 பார்களுக்கு கலால்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ரசீதுடன் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என, கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால் மதுபான கடைகளில் ரசீது இல்லாமல் தொடர்ந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து நேற்றிரவு கலால் துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் மதுபான கடைகளில் திடீர் ரெய்டு நடத்தினர்.
அதில் 12 பார்களில் ரசீது இல்லாமல் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்திருப்பது உறுதியானது. அதையடுத்து, அந்த 12 பார்களையும் கலால் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
கலால் துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரி மதுவரிச் சட்டம் மற்றும் விதிகளுக்கு முரணாக மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளன. ஒவ்வொரு விற்பனைக்கும் ரசீது வழங்காதது, மொத்த விற்பனையை மறைப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் மதுபானம் விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கிறது.
தற்போது, ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படும் எந்தவொரு மதுபான விற்பனையும் அளவு எதுவாக இருந்தாலும், தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபானங்களைச் சேமித்து வைக்க மறைமுகமாக அனுமதிப்பதாகக் கருதப்படுகிறது. அதன்படி, ரசீதுகள் இல்லாத அனைத்து விற்பனைகளும் மொத்த விற்பனை என கருதப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து மதுபான உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் மற்றும் முறையான ரசீதுகளுடன் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் மதுபானம் விற்பனை செய்வது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது' என்றனர்.
