புதுச்சேரி 85 நாட்கள் ஆட்சி முடக்கம்: மக்கள் முன்னேற்றக்கழகம் குற்றச்சாட்டு
புதுச்சேரி 85 நாட்கள் ஆட்சி முடக்கம்: மக்கள் முன்னேற்றக்கழகம் குற்றச்சாட்டு
UPDATED : ஆக 08, 2026 10:47 PM
ADDED : ஆக 08, 2026 09:21 PM
புதுச்சேரி: இரட்டை இன்ஜின் எதிரெதிர் திசையில் இழுத்ததால் வண்டி முன்னேறாது என்பதை நிரூபிக்கப்பட்டு விட்டது என, மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி 85 நாட்களாக நீடித்த அமைச்சரவை நாடகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. யாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை என்பதில் நடந்த பேரத்தால் 85 நாட்கள் அரசு செயல்படாமல் இருந்தது மக்களுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம்.
முதல்வர், கூட்டணிக் கட்சியும் இணைந்து ஆட்சி நடத்த வேண்டிய நிலையில், அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட இழுபறி அரசு நிர்வாகத்தை முடக்கிவிட்டது.
இரட்டை இன்ஜின் ஆட்சி என்று பெருமை பேசியவர்கள், எதிரெதிர் திசையில் இழுத்ததால் வண்டி முன்னேறாது என்பதை நிரூபித்துள்ளனர். ஆட்சியாளர்களின் கவனம் அடிப்படை பிரச்னைகளில் இல்லாமல், இலாகா பங்கீட்டிலும் அதிகார போட்டியிலும் இருந்துள்ளது.
சட்டத்தையும், கோர்ட் உத்தரவுகளையும் மதிக்க வேண்டிய அரசே, கட்டுப்பாடற்ற கட்அவுட், பேனர்களுக்கு இடமளித்துள்ளது. முதல்வரே சட்டத்தை மதிக்காவிட்டால், பொதுமக்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்.
85 நாட்கள் அமைச்சரவை செயல்படாமல் இருந்த காரணம் என்ன. கணக்கை தீர்க்க வேண்டிய நேரத்தில் தீர்ப்பேன் என்று கூறிய அந்த கணக்கு என்ன என, மக்களிடம் விளக்க வேண்டும். புதுச்சேரி அதிகார போட்டி தேவையில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம், கூட்டணியில் உண்மையான ஒத்துழைப்பு, மக்களுக்கான பொறுப்பான ஆட்சி தான் தேவை.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
