புதுச்சேரி வரலாறு புகைப்பட கண்காட்சி கடற்கரை மேரி ஹாலில் துவக்கம்
புதுச்சேரி வரலாறு புகைப்பட கண்காட்சி கடற்கரை மேரி ஹாலில் துவக்கம்
ADDED : நவ 02, 2024 06:30 AM

புதுச்சேரி: கடற்கரைச்சாலை நகராட்சியின் புதுப்பிக்கப்பட்ட மேரி ஹாலில், 3 நாள் நடக்கும் புதுச்சேரி வரலாறு புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கியது.
பிரஞ்சு ஆட்சியாளர்களிடம் இருந்து புதுச்சேரி முறைப்படி இந்தியாவுடன் இணைந்த நவ. 1ம் நாள் புதுச்சேரியின் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. விடுதலை நாளையொட்டி, சுற்றுலாத்துறை சார்பில், 3 நாள் நடக்கும் புதுச்சேரி வரலாற்று புகைப்பட கண்காட்சி கடற்கரை சாலை மேரி ஹாலில் நேற்று துவங்கியது.
கண்காட்சியில் புதுச்சேரி விடுதலை வரலாறு நிகழ்வுகள், பிரஞ்சு கட்டிடக்கலை, பண்பாட்டு வளர்ச்சி, பிரஞ்சு ஆட்சியாளர்களின் கீழ் புதுச்சேரியில் வளர்ச்சி முதல் தற்போதைய மறு உருவாக்கம் வரையிலான 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், பாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்றும், நாளையும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம். மேரி ஹால் திறக்கப்பட்ட பின்பு நடக்கும் முதல் கண்காட்சி என்பது குறிப்பிடதக்கது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
