தேர்தல் பரபரப்பு முடிந்து நிசப்தமானது புதுச்சேரி
தேர்தல் பரபரப்பு முடிந்து நிசப்தமானது புதுச்சேரி
ADDED : ஏப் 13, 2026 04:03 AM
புதுச்சேரி: புதுச்சேரியில இத்தனை நாளா இருந்த தேர்தல் பரபரப்பு தற்போது அப்படியே அடங்கிப்போய், ஊரே நிசப்தமாக உள்ளது.
கடந்த 15ம் தேதி தேர்தல் அறிவிச்சதுமே புதுச்சேரியே அதிர ஆரம்பிச்சது. வேட்பாளர் அறிவிப்பு, ஆதரவாளர்கள் கூட்டம்னு ஒவ்வொரு ஏரியாவும் களைகட்டுச்சு. இதுல முக்கியமா, அந்தப் பக்கம் தே.ஜ., கூட்டணி ஒரு வழியா இழுபறிக்கு அப்புறம் கைகோர்த்தாங்க. ஆனா, இந்த இண்டி கூட்டணிக்குள்ள தான் கடைசி வரைக்கும் பெரிய மல்லுக்கட்டே நடந்துச்சு.
காங்., தி.மு.க., வி.சி.க., கம்யூ., எல்லாரும் மனுத் தாக்கல் செய்தாலும், தொகுதிப் பங்கீட்டில் ஏகப்பட்ட குழப்பம். காங்., மட்டும் 23 தொகுதிகளில் மனு தாக்கல் செய்து, தி.மு.க.,வை ஷாக் ஆக்குனாங்க. கட்சி தலைமை சொன்னாலும், பல இடங்கள்ல கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே போட்டிபோட்டது, கூட்டணிக்குள் பயங்கர சலசலப்பு உண்டாக்கியது.
ஆனாலும் பிரசாரம் என்னவோ அனல் பறந்தது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள்னு எல்லாரும் வந்து போனாங்க. ஆட்டோக்கள்ல பாட்டு, டாடா ஏஸ் வண்டிகளில் மைக் செட்னு ஊரே சத்தத்துல மிதந்துச்சு... சுயேச்சை வேட்பாளர்களும் சளைக்காம பணி செஞ்சாங்க.
இப்படியெல்லாம் நடந்த இந்த தேர்தல், கடந்த 9ம் தேதி புதுச்சேரி வரலாற்றில் இல்லாத அளவுக்கு 91.23 சதவீத ஓட்டு பதிவாகியது.
இப்போ ஓட்டுப்போட்டு முடிஞ்சு மூணு நாள் ஆச்சு. அந்த மைக் சத்தம், ஆட்களோட நடமாட்டம் எதுவுமே இல்லாம ஊரே அமைதியாயிடுச்சு. ஒரு பக்கம் தேர்தல் முடிஞ்சு ரிலாக்ஸ் ஆனாலும், இன்னொரு பக்கம் வெயில் வாட்டி வதைக்குது.
வெயில் தாங்க முடியாம மக்கள் பாதிப் பேர் வெளியூருக்கு சுற்றுலாவிற்கு கிளம்பிட்டாங்க. மீதிப் பேர் வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டாங்க. மொத்தத்துல புதுச்சேரியில் இப்போ ரொம்ப நிசப்தமா இருக்கு.
