ADDED : ஏப் 22, 2026 05:22 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 2 பேர் 7 லட்சம் ரூபாய் ஏமாந்துள்ளனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டைச் சேர்ந்தவரை மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்வது தொடர்பான வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் இணைத்துள்ளார். அந்த குழுவில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர், மர்மநபர் அனுப்பிய ஆன்லைன் டிரேடிங் லிங்கில் பல்வேறு தவணைகளாக 6 லட்சத்து 71 ஆயிரத்து 800 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ரூ. 29 ஆயிரத்து 994 என, மொத்தம் 2 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 7 லட்சத்து ஆயிரத்து 794 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
