/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும்! நிடி ஆயோக்கிடம் முதல்வர் வலியுறுத்தல்
/
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும்! நிடி ஆயோக்கிடம் முதல்வர் வலியுறுத்தல்
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும்! நிடி ஆயோக்கிடம் முதல்வர் வலியுறுத்தல்
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும்! நிடி ஆயோக்கிடம் முதல்வர் வலியுறுத்தல்
ADDED : மார் 07, 2024 01:37 AM

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தர வலியுறுத்தி இதுவரை பல முறை சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தபோதும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போதுகூட மத்திய அரசு இணங்கி வரவில்லை.
மாநில முதல்வர் ரங்கசாமியும், அனைத்திற்கும் மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. கோப்புகள் காலதாமதம் ஆவதால் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கின்றன. மேலும் தனி மாநில அந்தஸ்து பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு சுதந்திரமாக செயலாற்ற முடியும் என, மேடை போட்டு புலம்பி தள்ளினார். ஆனாலும் மாநில அந்தஸ்தினை மத்திய அரசு கொடுக்கவில்லை. தற்போதைய நிலை தொடரும் என பார்லிமெண்ட்டில் தெளிவுப்படுத்தி இருந்தது.
இதற்கிடையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை, நிதி நிலைமை, மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய நிடி ஆயோக்கின் துணை தலைவர் சுமன் குமார் பெரி நேற்று புதுச்சேரிக்கு அரசு பயணமாக வருகை தந்தார்.
தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அவர், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொது கணக்கு குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என, மீண்டும் வலியுறுத்தினார். நிதி நிலையைப் பொறுத்தவரை மத்திய அரசின் உதவி இல்லாமல், புதுச்சேரி ஒரு தனி மாநிலமாக செயல்பட முடியும். நிதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அது சாத்தியம் என மீண்டும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து மத்திய அரசு திட்டங்கள் தற்போது 60க்கு 40 சதவீதம் என்ற அடிப்படையில் நிதி பங்களிப்பு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதனை மத்திய அரசு 90 சதவீதம், புதுச்சேரி அரசு 10 சதவீதமாக மாற்ற வேண்டும் என, வலியுறுத்தினார்.
மேலும், புதுச்சேரியில் ஜி.எஸ்.டி.,யில் இருந்து முறையாக செல்கிறது. எனவே நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிப்பதாக நிடி ஆயோக் துணை தலைவர் உறுதியளித்தார்.
என்ன செய்யலாம்
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 280 (3)-ன் படி நிதிக்குழு நியமிக்கப்பட்டு, மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதில் ஒரு சிறிய திருத்தத்தை மட்டும் செய்தாலே புதுச்சேரி பயனடையும். அதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 280 (3)ல் உள்ள மாநிலம் என்ற பதத்தில் 'சட்டசபை உள்ள யூனியன் பிரதேசங்களும்' அடங்கும் என்ற திருத்தத்தைக் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அல்லது 16வது நிதிக்குழுவின் வரையரைகளில் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசங்களுக்கும் நிதிக் குழுவின் பரிந்துரைகள் பொருந்தும் என்று கூற வேண்டும்.
இதுவரை இதை செய்யாததால் தான், புதுச்சேரி மத்திய நிதிக்குழுவில் சேர்க்கப்படவில்லை. புதுச்சேரியில் சட்டசபை இருப்பதால் யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழுவிலும் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை.
எனவே புதுச்சேரி மாநிலம் இங்கும் இல்லை; அங்கும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், மத்திய வரி வருவாய்க்கு புதுச்சேரி பங்கு அளித்த போதும் மத்திய வரியில் இருந்து புதுச்சேரிக்கு எந்தவிதப் பங்கும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

