/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிக ரன்கள் குவித்து புதுச்சேரி வீரர் சாதனை
/
அதிக ரன்கள் குவித்து புதுச்சேரி வீரர் சாதனை
ADDED : ஜன 16, 2025 06:10 AM

புதுச்சேரி: இளம் வயதில் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்து புதுச்சேரி வீரர் ராகவன் சாதனை படைத்து வருகிறார்.
புதுச்சேரி, சாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன்; லாஸ்பேட்டை சமுதாயக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த ராகவன், தனது 13 வயதில் தேசிய பள்ளிகள் அளவிலான கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி பள்ளி அணியில் பங்கேற்று, 36 பந்துகளில் 64 ரன்கள் அடித்ததுடன், கடைசி 4 பந்துகளில் 4 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார்.
2023-24ம் ஆண்டுக்கான தென் மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் ராகவன் புதுச்சேரி பல்கலைக்கழக அணிக்காக தேர்வாகி சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி, ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெற்றார்.
தொடர்ந்து, பி.சி.சி.ஐ .,நடத்தும் விசி டிராபி அணியில் புதுச்சேரி வீரராக முதன்முறையாக அணியில் இடம் பெற்றார். சி.ஏ.பி., மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில் கடந்த ஜூன் மாதம் நடந்த 10 ஒவர் ஆடவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பலமுறை ஆட்டநாயகன் விருது பெற்று, தான் ஆடிய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார்.
பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடந்த பாண்டிச்சேரி பிரீமியர் லீக் டி20 போட்டி தொடரில் மாகே மெகலோ ஸ்ட்ரைக்கர் அணி சார்பாக விளையாடிய ராகவன், தொடரில் அதிகபட்ச சிக்சர் விருதும், கேம் சேஞ்சர் விருதும் பெற்றார். மேலும், தொடரில் ராகவன் பங்கேற்ற அணி கோப்பையை வென்றது. இளம் வயதில் அதிக ரன்களை அடித்த பேட்ஸ்மனாக ராகவன் திகழ்ந்து வருகிறார்.

