/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை விபத்தில் சிறுவன் பலி பைக் கொடுத்த மாமன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
/
சாலை விபத்தில் சிறுவன் பலி பைக் கொடுத்த மாமன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
சாலை விபத்தில் சிறுவன் பலி பைக் கொடுத்த மாமன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
சாலை விபத்தில் சிறுவன் பலி பைக் கொடுத்த மாமன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
ADDED : ஏப் 04, 2025 07:12 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுவர்கள் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர்- பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் இறந்தார். மூவர் படுகாயமடைந்தனர். விபத்திற்கு காரணமான சிறுவன் மற்றும் அவருக்கு பைக் கொடுத்த மாமனை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் கோபி. இவரது 16 வயது மகன் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, தனது நண்பர்கள் இருவரை ேஹாண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு, காமராஜர் சாலையில் சென்றார். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த பல்சர் பைக், ஸ்கூட்டர் மீது மோதியது.
அதில், ஸ்கூட்டரில் வந்த மூன்று சிறுவர்களும், பைக் ஓட்டி வந்த சிறுவனும் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர். உடன் அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற கோபியின் மகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து இறந்த சிறுவனின் தாய் சுமித்ரா கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், விபத்தை ஏற்படுத்திய பல்சர் பைக் ஓட்டி வந்தது 16 வயதுக்குட்பட்ட சிறுவன் என்பதும், தமிழகத்தை சேர்ந்த அவர், விடுமுறைக்கு புதுச்சேரியில் உள்ள அவரது மாமன் மதன்,34; வீட்டிற்கு வந்திருப்பதும், சம்பவத்தன்று, தனது நண்பரை அழைத்து வர தனது பல்சர் பைக் கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார், வழக்குப் பதிந்து, சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த மதன் மீது, மோட்டார் வாகனச் சட்டம் 199(ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து அவரை நேற்று கைது செய்து, மாஜிஸ்திரேட் கோர்ட்-2ல் ஆஜர்படுத்தினர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது பிரிவு 4 உடன் இணைந்த 181, பிரிவு 199 (ஏ) மற்றும் 185 மோட்டார் வாகனச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 25வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதேபோன்று, விபத்து ஏற்படுத்திய பல்சர் பைக்கின் பதிவுச் சான்றை (ஆர்.சி.,) ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்ய புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும், விபத்தில் சிக்கி இறந்த சிறுவன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.எஸ்.பி., எச்சரிக்கை:
போக்குவரத்து பிரிவு சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி கூறுகையில், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக்கூடாது . மீறினால் மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே பெற்றோர் அல்லது உறவினர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இந்த சிரமங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என, தெரிவித்துள்ளார்.