UPDATED : அக் 18, 2026 12:35 AM
ADDED : அக் 18, 2026 12:33 AM
புதுச்சேரி: பங்குச்சந்தையில் முதலீட்டு ஆசை காட்டி பேராசிரியரிடம் 1.19 லட்சம் ரூபாய் சுருட்டி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணனகுமார்,42; தனியார் பொறியியல் கல்லுாரி இணைப் பேராசிரியர்.
முகநுாலில் வந்த பங்குச்சந்தை விளம்பரத்தைப் பார்த்த அவர், அதன் விபரங்களை கேட்டார். பின், அவர், பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்க்கப்பட்டார்.
அவர்கள் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்து, தனது விவரங்களை பதிவு செய்தார். அதில் உள்ள சப்போர்ட் ஆப்ஷன் மூலமாக தொடர்புகொண்டு பணம் செலுத்தும்படி மர்ம நபர்கள் அறிவுறுத்தினர்.
அதை நம்பி, அர்ச்சனா சர்மா மற்றும் ராகுல் திவாரி போன்ற நபர்களைத் தொடர்புகொண்டு, தனது ஆக்சிஸ் வங்கி கணக்கிலிருந்து பாங்க் ஆப் இந்தியா கணக்கிற்குப் பணம் அனுப்பினார்.
முதற்கட்டமாக சிறிதளவு லாபம் வருவது போலவும், ரூ.3,000 வரை திரும்பப் பெறுவது போல பணத்தை அனுப்பி நாடகமாடி பேராசிரியரின் நம்பிக்கையை அந்த கும்பல் பெற்றுள்ளது. இதனால் பேராசிரியர் ரூ.1,19,000 ரூபாய் வரை செலுத்திவிட்டு பங்கு சந்தையின் லாபத்திற்காக காத்திருந்தார்.
அதில், லாபமாக கிடைத்த தொகையை அவரால் எடுக்க முடிவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பேராசிரியர், தேசிய சைபர் கிரைம் வலை தளத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தற்போது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
