/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை விபத்துகளில் புதுச்சேரி புது உச்சம்
/
சாலை விபத்துகளில் புதுச்சேரி புது உச்சம்
ADDED : ஜன 05, 2025 06:36 AM

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடந்த 1,329 சாலை விபத்துக்களில், 212 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய சராசரி அளவைவிட அதிக சாலை விபத்து நடக்கும் மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது.
சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் மக்கள் தொகையை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகம். குண்டும் குழியுமான குறுகிய சாலைகள், சென்டர் மீடியன் இடைவெளி, தாறுமான பார்க்கிங், அதிவேக பயணம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2023ம் ஆண்டு மட்டும் புதுச்சேரியில் நடந்த சாலை விபத்துக்களில் 232 பேர் உயிரிழந்தனர். கடந்த 2024ம் ஆண்டில் 212 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதபோல் கடந்த 2023ம் ஆண்டு 1,299 சாலை விபத்துகளும், கடந்த 2024ம் ஆண்டு 1,329 சாலை விபத்துகளும் பதிவாகி உள்ளன.
நாடு முழுதும் சராசரியாக ஒரு லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு ஏற்படுவதாக தேசிய அளவில் பதிவாகி உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு சாலை விபத்தில் உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி கூறியதாவது;
புதுச்சேரியில் நடக்கும் ஒட்டுமொத்த விபத்து உயிரிழப்புகளில் 70 சதவீதம் பைக் விபத்துகளில் ஏற்பட்டவை. ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்றதால் தலையில் அடிப்பட்டு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிவது, அதிவேக பயணத்தை குறைத்தால் 50 சதவீத விபத்து உயிரிழப்புகளை தடுக்க முடியும். போக்குவரத்து போலீசார் விபத்து இல்லா புதுச்சேரியை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நகர பகுதியில் குறைவான வேகத்தில் செல்வதால் ஹெல்மெட் அவசியமா என கேள்வி எழுப்புகின்றனர்.
எந்த இடத்தில் எப்போது விபத்து நடக்கும் என யாருக்கும் தெரியாது. போலீசுக்காக ஹெல்மெட் அணிய வேண்டாம். உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்.
புதுச்சேரி முழுதும் 148 விபத்து பகுதி என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர, ஒவ்வொரு நாளும் புது புது இடங்கள் விபத்து பகுதியாக அறியப்பட்டு வருகிறது.
அந்த இடங்களில் பொதுப்பணித்துறை, நகராட்சி, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து விபத்து தடுப்பதிற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறோம்.
புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து புதிய சிக்னல்களும் மார்ச் மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும்.
புதுச்சேரி முழுதும் சென்டர் மீடியன்களில் 150 இடங்களில் தேவையற்ற இடைவெளி விடப்பட்டுள்ளது.
இதன் மூலமும் தினசரி விபத்து நடக்கிறது. இதனை மூட பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்திவிட்டோம். ஆனால் பொதுப்பணித்துறை காலம் தாழ்த்தி வருகிறது' என்றார். பேட்டியின்போது எஸ்.பி., செல்வம் உடனிருந்தார்.