/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுயநிதி இடங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு முன்னுரிமை... எதிர்பார்ப்பு; பிற மாநில மாணவர்கள் ஆதிக்கத்தால் தகர்கிறது வாய்ப்பு
/
சுயநிதி இடங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு முன்னுரிமை... எதிர்பார்ப்பு; பிற மாநில மாணவர்கள் ஆதிக்கத்தால் தகர்கிறது வாய்ப்பு
சுயநிதி இடங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு முன்னுரிமை... எதிர்பார்ப்பு; பிற மாநில மாணவர்கள் ஆதிக்கத்தால் தகர்கிறது வாய்ப்பு
சுயநிதி இடங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு முன்னுரிமை... எதிர்பார்ப்பு; பிற மாநில மாணவர்கள் ஆதிக்கத்தால் தகர்கிறது வாய்ப்பு
ADDED : செப் 01, 2025 03:45 AM

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு அடுத்தடுத்து சென்டாக் கலந்தாய்வு நடத்தி அரசு ஒதுக்கீடு, சுயநிதி இடங்கள், நிர்வாக இடங்களை நிரப்பி வருகின்றது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் சீட் கிடைக்காத மாணவர்கள், அடுத்து, அரசின் சுயநிதி இடங்களிலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக இடங்களில் கல்வி பயிலும் வாய்ப்பினை தேடுகின்றன.
தனியார் கல்லுாரிகளின் நிர்வாக இடங்களில் சேரலாம் என்பதை நடுத்தர சாமானிய மாணவர்கள் நினைத்து பார்க்க முடியாது. அங்கு சேர கட்டணம் மிக அதிகம். ஆண்டிற்கு பல லட்சம் செலுத்த வேண்டும்.
ஆனால் அரசின் நிர்வாக இடங்களை பொருத்தவரை அப்படி இல்லை. கட்டணம் மிகவும் குறைவு.
இதனால் அரசின் சுய நிதி இடங்களில் எப்படியாவது சேர்ந்துவிடலாம்; பொருளாதார ரீதியாக மிச்சம் என்று புதுச்சேரி மாணவர்கள் முட்டி மோதி வருகின்றனர். ஆனால் அப்படி சேர நினைக்கும் புதுச்சேரி மாணவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சுகின்றது.
புதுச்சேரி அரசின் சுயநிதி இடங்களாக இருந்தாலும் அகில இந்திய மாணவர்களுடன் புதுச்சேரி மாணவர்கள் போட்டிபோட்டு தான் சேர முடியும். இவ்வளவு மாணவர்களுடன் புதுச்சேரி மாணவர்கள் போட்டி சேருவது என்பது கடினமாக உள்ளது. இதனால் புதுச்சேரி அரசு கல்லுாரிகளில் உள்ள சுயநிதி இடங்களில் வெளிமாநில மாணவர்கள் அன்மை காலமாக அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வருகின்றனர். உள்ளூர் மாணவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி வருகின்ற சூழ்நிலையில் இந்த நடைமுறையை முழுவதுமாக மாற்ற வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலித்து வருகின்றன.
புதுச்சேரி மாணவர்களின் மனக்குமுறலுக்கு காரணம் இல்லாமல் இல்லை. உதாரணமாக பல் மருத்துவ படிப்புகளை எடுத்துகொள்ளலாம்.
பிம்ஸ், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் பி.டி.எஸ்.,இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் சேர முதலில் கிறிஸ்துவ, தெலுங்கு மொழி பேசும் புதுச்சேரி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன. அப்படியும் மாணவர்கள் அப்படிப்பில் சேராதபட்சத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டு அனைத்து மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகின்றது.
அதேவேளையில் அரசு கல்லுாரியான மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரியில் இந்த நடைமுறை இல்லை. சுயநிதி இடங்கள் பெயரில் நேரடியாக அகில இந்திய அளவில் பிற மாணவர்களுடன் புதுச்சேரி மாணவர்கள் போட்டிபோட்டு தான் சேர முடியும் என்கின்றனர். இது என்ன நியாயம். ஒரே படிப்பு. ஆனால் ஆயிரம் முரண்பாடு.
அதன் விளைவு என்ன தெரியுமா... மிகவும் மோசம். பிற மாநில மாணவர்கள் மகாத்மாகாந்தி பல் மருத்துவ கல்லுாரியில் ஆண்டிற்கு 2.50 லட்சம் ரூபாய் கட்டிவிட்டு சுலபலமாக சுயநிதி இடங்களில் படிப்பினை முடித்துவிட்டு செல்லுகின்றனர். அதேவேளையில் சுய நிதி இடங்களில் இடம் கிடைக்காத புதுச்சேரி மாணவர்கள் இதே படிப்பினை நிர்வாக இடங்களில் 6.50 லட்சம் ரூபாய் கட்டி படிக்கின்றனர்.
இந்த அரசின் சுயநிதி இடங்களில் மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் குறைந்த செலவில் நாங்கள் பல் மருத்துவம் படிக்க மாட்டோமா. இது எங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் இல்லையா என மனம் குமுறி வருகின்றனர்.
இதனால் தான், அரசின் சுய நிதி இடங்களில் முதலில் புதுச்சேரியை பூர்வீமாக கொண்ட மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி சேராதபட்சத்தில் பிற மாநில மாணவர்களை கொண்டு நிரப்பலாம் என கொந்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோர்களின்ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.