/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருப்தி! அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு பலன்
/
புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருப்தி! அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு பலன்
புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருப்தி! அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு பலன்
புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருப்தி! அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு பலன்
ADDED : ஜூன் 05, 2025 01:54 AM

புதுச்சேரி; உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரியில் 77 பெரிய தொழிற்சாலைகள், 204 நடுத்தர வகை தொழிற்சாலைகள், 9 ஆயிரம் சிறிய வகை தொழிற்சாலைகள் உள்ளன. தவிர 104 மருத்துவமனைகள், 7 மருத்துவ கல்லுாரிகள், 390 சுகாதார மையங்கள் உள்ளன. இவைகளால் ஏற்படும் சூழல் விளைவுகளை கட்டுப்படுத்துவது புதுச்சேரி மாசுக்கட்டுபாட்டு குழுமத்திற்கு சவலாக மாறிவிட்டது.
இருப்பினும் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று 5ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், மாசுக்கட்டுபாட்டு குழுமத்தின் தொடர்ச்சியான நடவடிக்கையால் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசின் கொள்கை முடிவு
கடந்த 2000ம் ஆண்டிற்கு பிறகு காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட தொழிற்சாலைகள், தண்ணீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு புதுச்சேரியில் புதிதாக ஆரம்பிக்க மாசுக் கட்டுப்பாடு குழுமம் அனுமதி அளிப்பதில்லை.
தொழிற்சாலைகளில் நிலக்கரி பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி காற்றின் தரம் 96 சதவீதம் நல்ல மற்றும் திருப்திகரமான நிலையில் உள்ளது என்று மத்திய மாசுக் கட்டுபாட்டு வாரியம் அமைத்துள்ள தொடர் காற்றின் தரம் ஆய்வு மைய முடிவுகளும் வெளிப்படுத்தியுள்ளன.
கடலில் கழிவு நீர்
புதுச்சேரியில் எந்தவொரு தொழிற்சாலையின் கழிவு நீரும், ஆறுகள், நீர்நிலைகளில் கலப்பதற்கு அனுமதி இல்லை. காலாப்பட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை பெருமளவு கழிவு நீரை கடலில் விட்டது. இப்போது 10 கோடி ரூபாய் செலவில் பூஜ்யம் கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலையாக மாறியுள்ளது. இதன் காரணமாக கழிவு நீர் கடலில் கலப்பது தவிர்க்கப்பட்டதோடு, ஒரு நாளைக்கு 1 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர் உபயோகம் குறைக்கப்பட்டது.
நிலத்தடி நீர்
20 இடங்களில் நிலத்தடி நீரின் தன்மையை அறியும் பரிசோதனையை ஆண்டிற்கு இருமுறையும், நான்கு ஆறுகள், இரண்டு ஏரிகளில் தண்ணீர் தன்மை மாதந்தோறும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தால் பரிசோதிக்கப்படுகிறது.
நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பொதுப்பணித் துறையின் சுத்திகரிக்கப்பட்ட 10 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்த துவங்கியுள்ளன.
தொடர் கண்காணிப்பு
புதுச்சேரியில் மாசு தன்மை கொண்ட 25 தொழிற்சாலைகளின் புகை, கழிவு நீரின் தன்மை கணினியின் மூலம் தொடர் கண்காணிப்பில் உள்ளன.
தேசிய அளவில் கவுரவம்
பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் மாநில அளவில் ஏழாவது இடத்தையும், யூனியன் பிரதேசங்களில் முதல் இடத்திலும் உள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவ கழிவுகளை அறிவியல் முறைப்படி அப்புறப்படுத்தியதில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு 10 கி.மீ., சாலை அமைத்தன் மூலம் தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை அறிவியல் முறைப்படி உபயோகமான மாற்று பொருட்களாக மாற்ற 25 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளது.
அறிவியல் முறைப்படி பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய புதுச்சேரியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என, பசுமை தீர்பாணையத்தின் தெற்கு மண்டலம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஒரு ஆண்டில் உற்பத்தியாகும் 35 ஆயிரம் டன் தொழிற்கழிவுகளில் 90 சதவிதம் மறுசூழற்சி செய்து, தேசிய அளவில் சிறப்பான இடத்தில் உள்ளது. 1,800 டன் மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்துவதை பார்கோடு, ஜி.பி.எஸ்., போன்ற நவீன கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 71 டன் மின் கழிவுகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
காற்றின் மாசை குறைப்பதற்கு திட்டம், ஆற்றில் மாசை குறைப்பதற்கு திட்டம், கடலின் தன்மையை மேம்படுத்த திட்டம், மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த திட்டம், புதுச்சேரி பசுமை பரப்பை அதிகரிக்க திட்டம், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை மறு பயன்பாட்டிற்கான திட்டம் என, ஆறு வகையான செயல்திட்டங்களை சுற்றுச்சூழல் துறை சத்தமில்லாமல் செயல்படுத்தி இந்த இலக்கினை எட்டி, சாதித்துள்ளது.