/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியின் விடுதலை நாள் விழா வரலாற்று பிழையை திருத்திய மக்கள்
/
புதுச்சேரியின் விடுதலை நாள் விழா வரலாற்று பிழையை திருத்திய மக்கள்
புதுச்சேரியின் விடுதலை நாள் விழா வரலாற்று பிழையை திருத்திய மக்கள்
புதுச்சேரியின் விடுதலை நாள் விழா வரலாற்று பிழையை திருத்திய மக்கள்
ADDED : அக் 19, 2025 02:57 AM
1673ம் ஆண்டு இந்தியாவில் பிரெஞ்சு நாட்டினர் காலுான்றிய இடமே புதுச்சேரி தான். அந்த ஆண்டே பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தனது வணிகத்தையும் துவங்கியது. அதன்பின் 1721-ல் மாகேவை கையகப்படுத்திய அவர்கள் அடுத்தடுத்து ஏனாம் மற்றும் காரைக்காலையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்தனர்.
நாடு முழுதும் விடுதலைப் போராட்டங்கள் அதிகளவில் வெடித்ததால் 1947-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை அளித்தனர். ஆனால் புதுச்சேரி மட்டும் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் பிரெஞ்சுக்காரர்களும் நாட்டை விட்டுவெளியேற வேண்டும் என்று புதுச்சேரி பிரஞ்சு - இந்திய போராட்ட வீரர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியிலும் புரட்சி வெடித்தது. போராட்டம் தீவிரமானதால் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிரெஞ்சு அரசாங்கத்திடம் புதுச்சேரி விடுதலையைப் பற்றி பேசினார்.புதுச்சேரி மக்கள் விருப்பப்பட்டால் தாங்கள் வெளியேறுவதாக பிரெஞ்சு அரசாங்கம் அதற்கு இசைவு தெரிவித்தது.
இதையடுத்து மக்களின் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது புதுச்சேரி பிரெஞ்சு - இந்திய போராட்ட வீரர்கள் நெட்டப்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்ததால் அருகிலிருந்த கீழூர் கிராமம் வாக்கெடுப்புக்கான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
அப்போது சட்டசபை இல்லை. ஆனால் நிர்வாக வசதிக்காக கொம்யூன்கள் பிரிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கொம்யூன்களுக்கும் மக்களின் பிரதிநிதிகளாக ஒரு மேயர் எனவும் அவர்களுக்கு கீழ் கவுன்சிலர்கள் எனவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
1954-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18ம் தேதி நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம், சந்திரநாகூர் ஆகிய பகுதிகளிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக எச்.எம்.காசிம், வெங்கடசுப்பா ரெட்டியார், எதுவார் குபேர், சுப்புராயலு நாயக்கர் உட்பட 178 பேர் கலந்து கொண்டனர்.
இந்த வாக்குப்பதிவில் புதுச்சேரி இந்தியாவோடு சேர ஆதரவாக 170 வாக்குகளும், எதிர்ப்பாக 8 வாக்குகளும் பதிவாகின. இந்த முடிவுகள் பிரெஞ்சு அரசாங்கத்துக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் காரணமாக நவம்பர் 1-ம் தேதி பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரதிநிதியாக பியர்லாந்தியும் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக கவுன்சில் ஜெனரல் கேவல்சிங்கும் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் பிரெஞ்சிந்தியப் பகுதிகள் அனைத்தும் இந்தியாவுடன் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில் சந்திரநாகூரை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் மட்டும் நிர்வாக வசதிகளுக்காக இவ்வளவு துாரம் வந்து செல்ல முடியாது என்பதால் தாங்கள் மேற்கு வங்கத்தோடு இனணந்து கொள்வதாக தெரிவித்ததால் புதுச்சேரி நான்கு பகுதிகளைக் கொண்டதாக சுருங்கியது.
இதன் அடையாளமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழூர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த 178 மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத்துாண் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. அதற்குப்பிறகு புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்துவிட்டதால் இந்தியாவின் சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மறுதினம் 16ம் தேதியை புதுச்சேரியின் சுதந்திர தினமாக புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு அமைப்பினர் அதிகாரப்பூர்வமான நவம்பர் 1-ம் தேதியே புதுச்சேரியின் விடுதலை நாளாக கொண்டாட வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் பயனாக நவம்பர் 1-ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாகவும் அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாகவும் அரசு அறிவித்தது. இதையடுத்து இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்த வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு முதல் நவம்பர் 1 ம் தேதி புதுச்சேரி, தனது விடுதலை நாளை கோலாகலமாக கொண்டாடுகிறது.