புதுச்சேரியில் ரூ.436 கோடியில் மேம்பாலம் நிலத்தை ஒப்படைத்தது பொதுப்பணித்துறை
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் மேம்பாலம் நிலத்தை ஒப்படைத்தது பொதுப்பணித்துறை
ADDED : செப் 18, 2026 11:31 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.436 கோடியில் கட்டப்பட உள்ள மேம்பால நிலங்களை ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்துள்ள பொதுப்பணித் துறை பணிகளை விரைவுப்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நகரப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜிவ் காந்தி சதுக்கம் வரையிலான பிரம்மாண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடுக்கவிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சாலை மற்றும் நிலப் பகுதிகளைச் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் நேற்று முறைப்படி ஒப்படைத்தார்.
மேம்பாலம் நீளம்: : கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரால் இத்திட்டத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் முழு அனுமதியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.436.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, பிரதான பாலம் மற்றும் அதன் பல்வேறு இணைப்புகளைச் சேர்த்து மொத்தம் 3.877 கி.மீ., நீளத்திற்கு பிரம்மாண்டமாக உருவெடுக்கவுள்ளது.
இணைப்பு பாலம்:: இம்மேம்பாலத்தின் பிரதானப் பகுதி இந்திரா சதுக்கத்திற்கு தெற்கே 430 மீட்டர் தொலைவில் தொடங்கி வடக்கு நோக்கிச் சென்று, ராஜிவ் சதுக்கத்தை கடந்து 620 மீட்டர் தொலைவில் உள்ள இ.சி.ஆரில் இறங்குகிறது. குறிப்பாக, இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து ராஜிவ் சதுக்கம் வரை நேரடியாக இணைக்கும் பிரதான பாலமானது 1,150 மீட்டர் நீளம், 21.5 மீட்டர் அகலம் கொண்டது. –
சுழல் மேம்பாலம்:: இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, அதிக போக்குவரத்து சந்திப்பான இந்திரா சதுக்கத்தில் உயர்மட்ட வட்ட வடிவச் சுழல் மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதிலிருந்து நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் எளிதாகச் சென்றுவர பல இணைப்புப் பாதைகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இந்திரா சதுக்கத்திலிருந்து கிழக்கில் அமைந்துள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் வரை 853 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலம் கொண்ட இணைப்பு பாதையும், விழுப்புரம் செல்லும் திசையை நோக்கி 300 மீட்டர் நீளம் 9 மீட்டர் அகலம் கொண்ட மற்றொரு இணைப்பு பாதையும் அமைக்கப்படுகின்றன.
ராஜிவ் சதுக்கத்திலிருந்து திண்டிவனம் நோக்கிச் செல்லும் சாலையில் 524 மீட்டர் நீளம் 17.50 மீட்டர் அகலம் கொண்ட மேம்பால இணைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இந்த பாலம் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரை டி அண்ட் டி இன்பரா லிமிடெட் மற்றும் தாரிவால் பில்டெக் லிமிமெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்த கூட்டு நிறுவனம் பெற்றுள்ளது.
கட்டுமானச் செயல்பாடுகளை விரைவில் தொடங்குவது தொடர்பாக, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் தலைமையில், செயற்பொறியாளர் ஸ்ரீநிவாசராம், உதவிப் பொறியாளர் சிவப்பிரகாசம் மற்றும் இளநிலைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில், கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான இடங்கள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கனவான இந்த மேம்பால் பணிகள் விரைவாக உருப்பெறவுள்ளன.
