"மிஷன் ஜீவன் யுவா சேப்டி கார்ப்ஸ்" என்ற உயிர் காக்கும் இயக்கம் துவக்கம்
"மிஷன் ஜீவன் யுவா சேப்டி கார்ப்ஸ்" என்ற உயிர் காக்கும் இயக்கம் துவக்கம்
UPDATED : ஜூலை 10, 2026 06:28 AM
ADDED : ஜூலை 09, 2026 03:20 PM

புதுச்சேரி: அவசர நிலைக்கு தயாரான புதுச்சேரியை உருவாக்கும் நோக்கில் மிஷன் ஜீவன் யுவா சேப்டி கார்ப்ஸ் என்ற உயிர் காக்கும் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
மருத்துவ அவசர நிலைகள், திடீர் மாரடைப்பு, சாலை விபத்து, அதிக ரத்தப் போக்கு, மூச்சுத் திணறல், விஷம் அருந்துதல் மற்றும் பல்வேறு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில், முதல் சில நிமிடங்களில் சரியான உதவி கிடைத்தால், எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற முடியும். இந்த அவசியத்தை உணர்ந்து, ஜிப்மர் அவசர மருத்துவம் மற்றும் விபத்து மருத்துவத் துறை சார்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இந்தியா இ.எம்.எஸ்., திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் மிஷன் ஜீவன் யுவா சேப்டி கார்ப்ஸ் என்ற இளைஞர் முன்னெடுக்கும் உயிர்காக்கும் இயக்கம் தொடங்கப்பட்டது.
இதன் மூலம், புதுச்சேரி முழுவதும் 10 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, உயிர் காக்கும் முதல் நிலை மீட்பாளர் பயிற்சியை அளித்து அவசர நிலைக்கு தயாரான புதுச்சேரி என்ற என்ற இலக்கை உருவாக்குவதாகும். இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி, மூலக்குளம் பெத்தி செமினேர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினர்களாக சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேல், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் உதயசங்கர், புதுச்சேரி ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழக இயக்குநர் (பொறுப்பு) அர்ஷ் ஜி, சமூக மருத்துவத் துறைத் தலைவர் கவிதா வாசுதேவன், ஜிப்மர் டாக்டர்கள் மனு அய்யன், சுரேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம், விபத்து மேலாண்மை, அவசர நிலை தகவல் பரிமாற்றம் போன்ற உயிர்காக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
