/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தீவிரம்: புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
/
கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தீவிரம்: புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தீவிரம்: புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தீவிரம்: புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : மார் 01, 2024 11:28 AM

வில்லியனுார் : கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணி காரணமாக, புதுச்சேரி- விழுப்புரம் இடையே மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப் பட்டுள்ளது. இரு மார்க்கத்திலும் ஒருவழி பாதையாக மாற்றி, போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதால் நெரிசல் இல்லாமல் செல்கின்றன.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே நான்குவழி சாலை அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இதில், புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் நேற்று காலை முதல் இச்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மதகடிப்பட்டில் இருந்து கலிதீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், வாதானுார், செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு, வில்லியனுார் வழியாக செல்கின்றன. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள் அரியூரில் இருந்து கீழூர், மிட்டாமண்டகப்பட்டு, பள்ளி புதுப்பட்டு, பள்ளிநேலியனுார், திருபுவனை பாளையம், திருபுவனையில் புதிய பைபாஸ் வழியாக செல்கின்றன.
இந்த இரு சாலையிலும் ஆங்காங்கே வழித்தட பெயர் பலகை வைத்து, ஒருவழி பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் செல்கின்றனர்.
மதகடிப்பட்டு வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில் தொழிற்சாலையில் இருந்து கனரக வாகனங்கள் எதிர் திசையில் வருவதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது, பணியில் உள்ள போலீசார் சரிசெய்து வாகனங்களை அனுப்பி வைக்கின்றனர்.
ஒருவழி பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதியில் சாலைகள் விசாலமாகவும், மேடுபள்ளங்கள் இல்லாமல் தரமாக உள்ளதால் வாகனங்கள் எவ்வித சிரமமும் இன்றி செல்கின்றன.
போக்குவரத்து மாற்றத்தினால் மதகடிப்பட்டு செல்ல வேண்டிய சில தனியார் பஸ்கள் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் வரை சென்று மீண்டும் புதுச்சேரிக்கு செல்கின்றன. இதனை போக்குவரத்து துறை கண்காணிக்க வேண்டும்.

