ADDED : டிச 22, 2024 07:24 AM
புதுச்சேரியில் வியாபாரம், அவசர தேவைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கடன் வாங்கி வாழ்க்கை நடத்துகின்றனர். வாங்கிய பணம் திருப்பி தருவதில் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்படும்போது, பிரச்னை போலீஸ் நிலையம் செல்லும்.
சமரச பேச்சில் பணம் வாங்கிய நபர் வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுத்து விட்டால், வழக்குகள் ஏதும் இன்றி இருவரும் சமரசமாக சென்று விடுவர். தினசரி இப்படி ஏராளமான பணம் மோசடி புகார்கள் போலீஸ் நிலையத்திற்கு வரும். போலீசாரும் இரு தரப்பிலும் பேசி பணம் வாங்கி கொடுத்து பிரச்னையை முடித்து வைப்பர். புதுச்சேரி கிழக்கு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் உயர் அதிகாரி, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான புகார்கள் வந்தால் போலீசார் சமரசம் என்ற பெயரில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. பணம் கொடுத்து ஏமாந்தால் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர வேண்டும். போலீஸ் நிலையம் வரக் கூடாது என கறாராக கூறிவிட்டார்.
அதனால், கிழக்கு சரக போலீஸ் நிலையங்களில், பணம் கொடுக்கல் வாங்கல் புகார் வந்தால், அங்குள்ள போலீசார், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீதிமன்றம் செல்லுங்கள் என அனுப்பி வைக்கின்றனர்.
பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், நீதிமன்றம் செல்வதிற்கு பதில் உள்ளூர் ரவுடிகளை நாடிச் செல்கின்றனர். ரவுடிகள் பணம் ஏமாற்றிய நபரை பிடித்து மிரட்டி பணத்தை வாங்கி கொடுத்து, அதில் கமிஷன் தொகையை வசூல் செய்து கொள்கின்றனர். இதனால் கிழக்கில் ரவுடிகள் காட்டில் வசூல் மழை பெய்து வருகிறது.