/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கடந்தாண்டு பதிவான மழை அளவு... 1,490 மி.மீ.,; கை கொடுத்தது வடகிழக்கு பருவ மழை
/
புதுச்சேரியில் கடந்தாண்டு பதிவான மழை அளவு... 1,490 மி.மீ.,; கை கொடுத்தது வடகிழக்கு பருவ மழை
புதுச்சேரியில் கடந்தாண்டு பதிவான மழை அளவு... 1,490 மி.மீ.,; கை கொடுத்தது வடகிழக்கு பருவ மழை
புதுச்சேரியில் கடந்தாண்டு பதிவான மழை அளவு... 1,490 மி.மீ.,; கை கொடுத்தது வடகிழக்கு பருவ மழை
ADDED : ஜன 31, 2024 02:30 AM

புதுச்சேரியில் ஆண்டு முழுவதும் பரவலாக பெரும்பாலான மாதங்களில் மழை பெய்வது வழக்கம். இருந்தபோதும், ஜூலையில் துவங்கி செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழையும் புதுச்சேரியின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்கின்றன.
புதுச்சேரி பகுதியின் ஆண்டு சராசரி மழையளவு 1,391 மி.மீ., ஆகும். கடந்த 12 ஆண்டுகளை எடுத்து கொண்டால், 2012ல் 967 மி.மீ., 2013ல் 960 மி.மீ., மழையளவு பதிவானது. கடந்த 2016ம் ஆண்டில் மிகமிக குறைந்த அளவாக 657 மி.மீ., மழை பெய்தது.
அதேசமயம், பெரும்பாலான ஆண்டுகளில் சராசரியை தாண்டி மழை கொட்டி தீர்த்துள்ளது. குறிப்பாக, கடந்த 2015ம் ஆண்டிலும், 2021ம் ஆண்டிலும் 2,000 மி.மீ., அளவை தாண்டி கனமழை பெய்தது.
கடந்த 2021ம் ஆண்டில் 2,562 மி.மீ., அளவுக்கு கன மழை பெய்தது. இதுவே, கடந்த 12 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவாகும்.
கடந்தாண்டு மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பேய் மழை கொட்டி தீர்த்தது.
வெள்ளம் வடியாமல் சென்னை தத்தளித்தது. தொடர்ச்சியாக, தென் மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்ததால் எங்கும் வெள்ளக்காடாக மாறியது.
அதேசமயம், சென்னைக்கும், தென் மாவட்டங்களுக்கும் இடையில் அமைந்துள்ள புதுச்சேரியிலும் ஆண்டு சராசரியை தாண்டி மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டில் 1,490 மி.மீ., மழை பெய்துள்ளது.
அதாவது, குளிர் காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 7 மி.மீ., மழையும், கோடைக்காலமான மார்ச் துவங்கி ஜூன் வரையிலான 4 மாதங்களில் 271 மி.மீ., மழையும் பெய்தது.
அதேசமயம், ஜூலை துவங்கி, செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை சீசனில் 424 மி.மீ., அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து, டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை சீசனில் 787 மி.மீ., மழையளவும் பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டு சராசரியை தாண்டி மழை பெய்து இருந்தாலும், பெரும்பாலான நாட்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்யவில்லை. இடைவேளை விட்டு மழை நிதானமாக பெய்ததால், மழை நீர் பூமிக்குள் சென்று விட்டது. நீர்நிலைகள் முழுமையாக நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.