UPDATED : மே 15, 2026 10:20 PM
ADDED : மே 15, 2026 10:02 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று பெய்த கனமழையால் முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்யத் துவங்கியது.
இதனால் நகரின் முக்கிய சந்திப்புகளான இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம் ஆகியவற்றில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதேபோல் காமராஜ் சாலை, இ.சி.ஆர்., சாலை, கருவடிக்குப்பம் மற்றும் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் சாலைகளில் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சாலைகளில் தேங்கிய நீரால் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நின்றன. இதனால் முக்கியச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழை பெய்யத் துவங்கிய சில நிமிடங்களிலேயே பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
