/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முரண்டு பிடித்த ரங்கசாமி பா.ஜ.,விடம்... சரண்டர்: மூன்று நாள் பிரச்னை முடிவுக்கு வந்தது
/
முரண்டு பிடித்த ரங்கசாமி பா.ஜ.,விடம்... சரண்டர்: மூன்று நாள் பிரச்னை முடிவுக்கு வந்தது
முரண்டு பிடித்த ரங்கசாமி பா.ஜ.,விடம்... சரண்டர்: மூன்று நாள் பிரச்னை முடிவுக்கு வந்தது
முரண்டு பிடித்த ரங்கசாமி பா.ஜ.,விடம்... சரண்டர்: மூன்று நாள் பிரச்னை முடிவுக்கு வந்தது
ADDED : ஜூலை 11, 2025 04:01 AM

புதுச்சேரி: கவர்னருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிருப்தியில் இருந்த முதல்வர் ரங்கசாமியை, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேரில் சந்தித்து சமாதானம் செய்ததை தொடர்ந்து, முதல்வர் மூன்று நாட்களுக்கு பின் நேற்று வழக்கம்போல் சட்டசபைக்கு சென்றார்.
சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தில் அதிருப்தி அடைந்த முதல்வர் ரங்கசாமி கடந்த 8ம் தேதி ராஜினாமா செய்யப்போவதாக கூறியது, புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணாமல், சட்டசபைக்கு வர மாட்டேன் எனக் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அன்று இரவு முதல்வரின் வீட்டிற்கு சென்று சமரச முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், முதல்வர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்வரை சந்தித்து, தாங்கள் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவதாக கூறிய என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள், பின்னர் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர். பின்னர், சட்டசபையில் சபாநாயகரை சந்தித்து, மாநில அந்தஸ்து குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபையை கூட்ட வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.
மூன்றாம் நாளான நேற்று காலை முதல்வர் ரங்கசாமி வழக்கம் போல் வீட்டில் டென்னிஸ் விளையாடினார். பின், ஆரோவிலில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று வந்த பின், வீட்டில் அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார் ஆகியோருடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசில் ஏற்பட்டுள்ள விரிசலை தொடர்ந்து பா.ஜ., மேலிடம், சமதான துாதுவராக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது. நேற்று காலை 9:30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்த அவர், ஓட்டல் அக்கார்டில் பா.ஜ., நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், அங்கிருந்து காலை 11:45 மணிக்கு புறப்பட்டு கோரிமேடு, அப்பா பைத்தியசாமி கோவில் அருகில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார். அவருடன் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வீட்டிற்குள் சென்ற நிர்மல்குமார் சுரானா, அங்கு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த முதல்வருக்கு சால்வை அணிவித்தார். தொடர்ந்து முதல்வர், நிர்மல்குமார் சுரானாவிற்கு சால்வை அணிவித்தார். பின்னர் இருவரும் 40 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, முதல்வர் ரங்கசாமி, நிர்வாகத்தில் ஏற்படும் சிக்கல், அதனால், ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மாநில அந்தஸ்தின் அவசியத்தை விளக்கி கூறினார்.
முதல்வரின் மனக்குமறலை கேட்ட நிர்மல்குமார் சுரானா, இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறி, பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்ததால், முதல்வர் சமாதானமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி, கடந்த 8 ம் தேதி கூறிய சபதத்தை முடித்துக் கொண்டு சட்டசபைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு 12:50 மணிக்கு சட்டசபைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி, அங்கு காத்திருந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின், தனியார் ஓட்டலில் நடந்த அரசு விழாவிற்கு புறப்பட்டு சென்றனர். அவருடன், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபை மற்றும் அரசு விழாவிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.