ADDED : பிப் 12, 2025 03:37 AM

புதுச்சேரி : பாண்டெக்ஸ் நிறுவன ஊழியர்கள், சம்பளம் வழங்க கோரி கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு, கடந்த பட்ஜெட்டில் ரூ.1 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியிலிருந்து ஊழியர்களுக்கு சேர வேண்டிய 60 மாத நிலுவை சம்பளத்தில், 5 மாத சம்பளம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, ஊழியர்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 6வது நாளாக பணிகளை புறக்கணித்து, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் கொளஞ்சியப்பன், பாரதிய மஸ்துார் சங்கம் ஆசைத்தம்பி ஆகியோர் தலைமையில், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை மனுவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை சந்தித்து அளிக்க சென்றனர். அவர், இல்லாததால், அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பட்ஜெட் டில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து, 5 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு வரவேண்டிய நிலுவை தொகையை வசூலித்து, ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.